புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
புதுவையில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியதை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களிக்க வாக்குசாவடிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள வ.உ.சி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் வாக்காளர்களை வரவேற்க தாவணி அணிவிக்கப்பட்டு, கையில் பூக்கள் நிரம்பிய தட்டோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா என்ற ரோபோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நிலா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த ரோபோ பாரம்பரிய உடையான தாவணியை அணிந்து கையில் பூத்தட்டை ஏந்தியபடி வாக்காளர்களுக்கு பூக்கொடுத்து வரவேற்ற நிகழ்வு தங்கள் வாக்கை செலுத்த வந்த வாக்காளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. ஜனநாயக கடமையாற்ற வந்த தங்களை ரோபோ வரவேற்று பூ கொடுப்பது தங்களுக்கு மிகவும் சர்ப்ரைஸாக இருப்பதாக பல வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நிலா ரோபோவானது தாவணிஅணிந்து கையில் பூ தட்டை ஏந்தியபடி வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்பதுடன் வாக்காளர்களுக்கு தேவையாக முக்கிய அறிவுறுத்தல்களையும் அழகிய குரலில் சொல்வது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
புதுவை தேர்தல் ஆணையத்தின் இந்த வித்தியாசமான முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த முயற்சி மேலும் அதிகளவிலான வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வர வைக்க கூடும் என்பதால் மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்று வருகிறது. நிலா ரோபோ இருக்கும் வாக்குசாவடியான புதுவை மிஷன் வீதியில் உள்ள வஉசி பள்ளியில், பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் தென்னங்கூரைகளால் பசுமை பந்தல் போடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அமர வசதியாக இருக்கைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்கு சாவடிக்குள் நுழையும் வாக்காளர்களை பெண் வேடமிட்ட நிலா ரோபோ பூக்கள் கொடுத்து வரவேற்கும் புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி தேர்தல் ஆணையம் டிரோன் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
