அசாமில் கோவிலுக்குள் தரிசனம் செய்ய சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் எனும் பெயரில் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14ஆம் தேதி முதல் மணிப்பூரில் இருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டூள்ளது.
இந்நிலையில் அசாமில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்குள்ள ஸ்ரீ சங்கர தேவ் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார். இதில் ஹிமந்த் பிஷ்மா ஷர்மா கட்சியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இடையூறு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி கோயிலுக்குள் நுழைய முயன்ற போது அங்கு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதில் ராமர் கோவில் கோவில் நிகழ்ச்சி தொடங்கிய பிறகே கோவில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.