உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான கருத்து : ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்
பா.ஜ.க உறுப்பினர்கள் பொய்யர்கள், அதிகாரத்துக்கு துடிப்பவர்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கொலை குற்றவாளி என காங்கிரஸ் எம்.பி.யும் தற்போதைய மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்திருந்தார், குறிப்பாக கடந்த 18/08/2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தின்போது இதனை பேசியிருந்தார்.
இதனையடுத்து இந்த அவதூறு கருத்து தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க பிரமுகர் நவீன் ஜா என்பவர் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ராஞ்சி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மனுவை முதலில் தள்ளுபடி செய்தது, ஆனால் அதனை எதிர்த்து ராஞ்சி நீதித்துறை ஆணையர் முன்பு நவீன் ஜா மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த ராஞ்சி நீதித்துறை ஆணையர், குற்றச்சாட்டு தொடர்பான விவரங்களை படிக்கும்போது, பலமுறை மீண்டும் மீண்டும் அவதூறாக பேசியதை அறிய முடிகிறது, எனவே இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஆதாரங்கள் அடிப்படையில் புதிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் மறு உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு இந்திய தண்டனை சட்டம் 500ன் கீழ் முகாந்திரம் உள்ளது எனக்கூறி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, ஆனால் உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்ற உத்தரவில் எந்த பிழையையும் காண முடியவில்லை எனக்கூறி ராகுல் காந்தி மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே நீதிமன்றம் அளித்துள்ள பல தீர்ப்புகளின் படி சம்மந்தப்பட்ட நபர் தான் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுக்க முடியும், சம்மந்தம் இல்லாத மூன்றாம் நபர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுக்க முடியாது என தெரிவித்தார்.
இதனடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க பிரமுகர் நவீன் ஜா பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.