ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- ஓட்டுநர் பலி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீ பிடிப்பதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக நேற்று இரவு சென்றது. இந்த ஆம்புலன்ஸ் அஸ்தினாபுரத்தில் உள்ள பிஎன் ரெட்டி நகர் சந்திப்பில் சாலையின் சென்டர் மீடியினில் இடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ பிடித்தது. இதில் 33 வயதுடைய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஆம்புலன்ஸ் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கட்டுப்படுத்தினர். ஐதராபாத்தில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையில் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. இந்த காட்சிகள் ஐதராபாத்தா அல்லது வெளிநாடா என்று தெரியாத வகையில் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது