மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து மாமனாருக்கு போன் செய்து தெரிவித்த காதல் கணவர்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிவீடு சிவாலயம் தெருவை சேர்ந்த மருதுகுள சந்தியாராணி. அடுத்த தெருவில் வசித்து வந்த வனபள்ளி ராம்பாபுவை காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன சில மாதங்களில் ராம்பாபு செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுப்படுவது தெரிய வந்தது. இந்த வழக்கில் சிறைக்கு சென்று வந்த நிலையில் காதல் கணவர் திருடன் என்பதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று ராம்பாபுவுடன் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து வேண்டாம் தன்னுடன் குடும்பம் நடத்த வர வேண்டும் என ராம்பாபு கேட்டு வந்தார். ஆனால் அதனை சந்தியாராணி ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று காலை ஆக்கி வீட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதற்காக சந்தியாராணி பைக்கில் சென்றார். சந்தியாராணி தனியாக செல்வதை அறிந்த ராம்பாபு வழிமடக்கி நிறுத்தி பேசுவது போன்று அருகில் சென்று தான் கொண்டு வந்த கத்தியை வைத்து கழுத்து அறுத்து கொலை செய்தார்.
பின்னர் சந்தியாராணி அப்பாவிற்கு போன் செய்து என் மனைவியை என்னுடன் குடும்ப நடத்த அனுப்பவில்லை. என்னுடன் வாழாத என் மனைவி இருக்க கூடாது என்பதால் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டதாக கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாராணி பெற்றோர் தங்கள் மகள் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து கதறி அழுதனர்.
தங்கள் மகளை அநியாயமாக கொன்ற ராம்பாபுவை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தனர். ஆக்கிவீடு போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.