சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி செக்டார் பகுதியை சேர்ந்தவர்கள் 14 வயது சிறுவர்கள் புரன் சாஹு, வீர் சிங். இவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற டல்லி ராஜ்ஹரா – துர்க் உள்ளூர் ரயில் அவர்கள் மேல் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குவந்த பத்மநாப்புர் போலிஸார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயிலில் இருந்து வரும் ஹாரன் சத்தம் எழுப்பியபோதும் அதனை பொருட் படுத்தாமல் கேம் விளையாடியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.