வயநாடு மீட்பு பணியை முடித்து புறப்பட்டுச் சென்ற ராணுவத்தினருக்கு பொதுமக்கள் கைத்தட்டி கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை , சூரல்மலை , மேப்பாடி கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதனை அடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய – மாநில பேரிடர் மீட்புப்படையினர் , மாநில காவல்துறையினர் உள்ளிட்டோர் கடந்த 9 நாட்களாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த கோர நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
குறிப்பாக ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பலியானவர்களின் உடல்களை எடுத்துச்செல்வதில் பெரும் பங்கு வகித்தது. இதேபோல் மண்ணில் புதைந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஏராளமான மோப்ப நாய்கள் சிறப்பான பங்களிப்பை செய்தன. இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினரை திருப்பி அனுப்ப கேளர முடிவு செய்தது. இதனை அடுத்து, ராணுவ வீரர்கள் வயநாட்டில் மேப்பாடி பகுதியில் தங்கியிருந்த ராணுவத்தினர் புறப்பட்டு சென்றனர்.
அப்போது சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கைகளை தட்டி பிரியா விடை கொடுத்தனர். மேலும் ராணுவ அதிகாரிகளுக்கு கேரள அமைச்சர் ரியாஸ் நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். தாங்கள் இங்கிருந்து புறப்பட்டு சென்றாலும் தங்கள் இதயங்களை வயநாடு மக்களிடமே விட்டுச்செல்வதாக நெகிழ்ச்சியுடன் ராணுவத்தினர் தெரிவித்தனர்.