வே.மதிமாறன்

பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இன்றும் அதிகாரத்தோடு, அசைக்க முடியாத செல்வாக்கோடு இருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். 100 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிகள் உண்டு. ஆனால், அவை செல்வாக்கு பெற்றிருந்த காலங்கள் ஒன்று உண்டு.

இன்னும் சொல்வதானால் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தேசியக் கட்சிகளின் தேர்தல் அங்கீகாரம் அல்லது கூடுதலாக நாடாளுமன்றத்தில் இடங்கள் பெற்றது, 2019ஆம் ஆண்டு, தி.மு.க. அவர்களுக்கு ஒதுக்கிய இடங்களால்தான்.
தி.மு.க.விற்கு எப்படி இது சாத்தியம்?
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கு முன், அரசியல் அதிகாரம் பண்ணையார்கள், மிராசுதார்கள், பணக்காரர்களிடம் மட்டுமே இருந்தது. பெருந்தலைவர் காமராசர் பொறுப்பேற்ற பிறகும் அதே நிலைதான். தன் பண்ணையில் வேலை செய்கிற ஒரு இளைஞனை போலீஸ் சந்தேக வழக்கில் அழைத்துச்சென்றால், அவனை மீட்டுவர அவன் தாய் பண்ணையார் வீட்டு வாசலில்தான் நிற்க வேண்டும். அவரைப் பார்ப்பதற்கே நான்கு நாட்கள் ஆகிவிடும். அதன் பிறகு, பண்ணையார் காவல் நிலையம் சென்று பார்ப்பதற்குள், அவனே ரிமாண்ட் முடிந்து வீட்டுக்கு வந்துவிடுவான். சில நேரங்களில் அவனைக் கைது செய்யச் சொன்னதே பண்ணையாராகக்கூட இருந்திருக்கும்.
கி.மு.க தொடங்கப்பட்ட பிறகு, அதுபோன்ற எளியவரை போலீஸ் இரவு 10 மணிக்கு அழைத்துச்சென்றால், அவன் தாய் 10.15 மணிக்கு பக்கத்துத் தெருவில் இருக்கும் தன் மகனைப் போன்ற ஒரு கூலித் தொழிலாளியான தி.மு.க. வட்டச் செயலாளரின் வீட்டுக்குச் செல்வார்.
தன் ஊருக்கு வர இருக்கும் தன் தலைவர் வருகைக்காக போஸ்டர் ஒட்டிவிட்டு, அவசரமாக சாப்பிட உட்கார்ந்த அவர், அந்தத் தாயின் அழுகுரல் தாங்காமல் சோற்றில் கையை உதறிவிட்டு வியர்வை நாற்றத்துடன்கூடிய அதே சட்டையை அணிந்துகொண்டு, காவல் நிலையம் சென்று இரவு 11.30 மணிக்குள் அந்த இளைஞனை வீட்டில் சேர்ப்பார்.
1000 ஏக்கர் வைத்திருக்கிற பண்ணையார் காவல் நிலையம் சென்றால், அவரை எப்படி நாற்காலியில் உட்காரவைத்துப் பேசுவார்களோ; அதே மரியாதையுடன் அடுத்த வேலை உணவிற்குச் சிரமப்படுகிற தி.மு.க. வட்டச் செயலாளருக்கும் நாற்காலி போடப்பட்டது.
அவருக்கு 1000 ஏக்கருக்கு உரிய மரியாதை. இவருக்கு அழுக்கு வேட்டியிலிருந்த கருப்பு-சிவப்பு வண்ணத்திற்குக் கிடைத்த மரியாதை அந்த ஊரில் அரசியல் அறிவுகொண்ட பெரும்பான்மை தொண்டர்களின் முகம் அவர் என்ற பயம்.
ஆம். திராவிட முன்னேற்றக் கழத்தை அண்ணா கட்டமைக்கும்போது, மேலிருந்து கட்டவில்லை. கீழிருந்து கட்டமைத்தார். இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் இல்லாத சிறப்பு.
கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளிலும் எளியவர்களுக்கான கட்டமைப்பு இருந்தாலும் அது அதிகாரத்திற்குக் கொண்டுசேர்க்கவில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி, தடியும் அடியுமாக ரத்தக்காயங்கள், சிறை என இன்னும் கூடுதல் ஒடுக்குமுறைக்குப் பொறுப்புகளில் இருந்த ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளானார்கள்.
கட்சிக்குள் அண்ணா அதிகாரத்தை ஜனநாயகப்படுத்தினார். அதனால் தான் கலைஞரைப் போன்ற எளிய ஜாதிரீதியாகக் கடுமையான ஒடுக்கு முறையைச் சந்தித்த எண்ணிக்கையிலும் குறைவான சமூகத்திலிருந்து ஒருவர் தலைமைக்கும் ஆட்சிக்கும் வரமுடிந்தது.
ஆனாலும் தி.மு.க. தோல்வியைச் சந்தித்தது ஏன்?
பேசி வளர்த்த இயக்கத்தை, பேசவே தெரியாத எம்.ஜி.ஆர் தான் தோற்கடித்தார். பிறகு, பேச முடியாதபோதும் வெற்றி பெற்றார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவும் வந்துசேர்ந்தார்.
மொழி உணர்வு, சமூக நீதி, பெண்கள் நலம் எனப் பல பரிணாமம் கொண்ட தி.மு.க.விற்கு எதிராக இதுபோன்ற எந்தப் பின்புலமும் இல்லாத அதி.மு.க வெற்றி பெற்றது எப்படி?
இது, எம்.ஜி.ஆர் என்கிற தனிநபரின் வெற்றியல்ல. பெரியார் பின்புலத்தோடு சமூக நீதி அரசியலில் பெரும் பாய்ச்சலோடு இருந்த தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒட்டுமொத்த தி.மு.க. எதிர்ப்பாளர்களும் ஒன்றிணைந்தார்கள். அதற்குத் தி.மு.க. விலிருந்தே மிகப் பிரபலமானவரை ஒரு முகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
தி.மு.க.வின் கொள்கைகள், ஆட்சியின் திட்டங்கள் குறித்து, எதிர் நிலையில் சின்ன விமர்சனம்கூட இல்லாமல் கட்சிக்குள் கலைஞருக்கு எதிரான காய் நகர்த்தலை மட்டும் திட்டமிட்டுச் செய்தார்கள். ‘கட்சிக் கணக்கை கருணாநிதி காட்டவில்லை’ எனக் கணக்கு காட்ட வேண்டிய கட்சியின் பொருளாளரான எம்.ஜி.ஆர், அதைப் பிரதானப்படுத்திப் பேசியது வேடிக்கை. பிறகு அவரின் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரிடம் கணக்குக் கேட்டவர்களை அவர் கட்சியை விட்டு நீக்கியதும் நடந்தது.
அன்று காங்கிரஸ் கொண்டுவந்த எமெர்ஜென்சி, தி.மு.க.வை வீழ்த்துவதற்குத் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது.
கலைஞர் எமெர்ஜென்சிக்கு எதிராக அல்ல, அதுகுறித்து கருத்து சொல்லாமலிருந்தாலே அவர் ஆட்சி கலைக்கப்பட்டிருக்காது. மாநில சுயாட்சிக் கொள்கையைப் பேச ஆரம்பிக்கப்பட்ட கட்சி எமெர்ஜென்சியை எப்படி ஆதரிக்க முடியும்?

எமெர்ஜென்சியால் தி.மு.க. ஆட்சியை இழந்தது. நெருக்கடி நிலையின்போது இந்தியாவிலேயே கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானதும் தி.மு.க. தான். அதன் விளைவாக எமெர்ஜென்சியின் குழந்தையாக அதி.மு.க ஆட்சியைப் பிடித்தது.
இதுபோன்ற ஒரு காலத்திற்காகவே காத்திருந்த கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட நெடுஞ்செழியன் போன்ற சில தி.மு.க. வின் பிரமுகர்களும் இணைந்துகொண்டார்கள். அவர்களே எம்.ஜி. ஆருக்குத் திராவிடத் தமிழ் உணர்வு அடையாளமும் தந்தார்கள்.
அண்ணா பெயரில் கட்சி வைத்திருந்தாலும் அவர் அண்ணாவின் கொள்கைகள் எதையும் மக்கள் மத்தியில் பேசவில்லை. மாறாக, ‘கருணாநிதி ஊழல் செய்துவிட்டார்’ எனக் கலைஞர் எதிர்ப்பை மட்டுமே பிரதானப்படுத்தி பிரச்சாரம் செய்தார்.
ஆனால் கலைஞரோ, அதுவரை இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டிற்குப் புதிய கட்டமைப்பை உருவாக்கியிருந்தார். விவசாய நாடான சோவியத்தை முதலாளித்துவ நாடுகள் மிரளும் வகையில் தொழில் மயமாக்கினார் லெனின். அதற்கு அவர் செய்த முக்கியமான திட்டம் சோவியத்தை மின்சாரமயமாக்கியது. மின்சாரம் ஒரு ஊரை ஒரே இரவிற்குள் அடுத்த கட்டத்திற்கு உயர்த்திவிடும்.
அதுபோல் கலைஞர் தமிழ்நாட்டை மின்சாரமயமாக்கினார். அத்துடன் கிராமங்களைச் சாலைகளால் சிறிய நகரங்களோடு இணைத்தார். கீழத்தெரு, மேலத்தெருவிற்குள்ளே சுற்றிவந்த மக்கள் தங்கள் மருத்துவம், சினிமா, வர்த்தகம் என நகரங்களுக்கும் போய்வர ஆரம்பித்தார்கள். கிராம வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. சிறிய நகரங்களின் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்தது.
இன்று போலவே அன்றும் மத்திய உணவுக் கழகம் தமிழ்நாட்டிற்குத் தேவையான அரிசி ஒதுக்கீட்டைத் தரமறுத்தது. அதன் காரணமாகவே கலைஞர் 1972ஆம் ஆண்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆரம்பித்தார். நெல் கொள்முதலில் தொடங்கி, ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும் நியாய விலை கடையாக (ரேசன் கடை) விரிவடைந்தது.
அரிசியில் ஆரம்பித்து பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கினார். காங்கிரஸ் ஆட்சியில் பட்டினிச் சாவுகள் இயல்பாக இருந்தது. கேட்டதற்கு ‘எலிக்கறி சாப்பிடுங்கள்’ என்று எகத்தாளமாகப் பதில் அளித்தார்கள். இன்று இந்தியாவில் பட்டினிச் சாவுகளே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்குக் கலைஞரே காரணம்.
அவர் தொடங்கிய நியாய விலைக் கடை முறைதான் இன்று இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது.
1967 வரை 109 கலை அறிவியல் கல்லூரிகள் இருந்தன. அதில் இரண்டு மட்டுமே அரசுக் கல்லூரிகள். கலைஞர் ஆட்சியில் (1969-1976) 68 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி. குடிசை மாற்று வாரியம் என அந்த மக்களை நகரத்திற்கு வெளியே அனுப்பாமல், நகரத்திற்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களையே அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றித் தந்தார் என்பதுதான் அதில் மிகச் சிறப்பு.
கை ரிக்ஷாவை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கினார். இடஒதுக்கீடு இல்லாத பல ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்தார் சுலைஞர்.
இது சிறிய வரிசைதான். ஏராளமான திட்டங்களை 1976ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றினார். அந்த ஆட்சியைத்தான் அன்றைய காங்கிரஸ் கலைத்தது. அந்தச் சிறப்பான ஆட்சியைத்தான் எம்.ஜி.ஆர் அவதூறு செய்து மக்களிடம் பொய்யான தகவல்களைச் சேர்த்தார்.
பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், அப்படியே கலைஞரின் திட்டங்களைத் தொடர்ந்தார். அந்தத் திட்டங்களையெல்லாம் எம்.ஜி.ஆரின் திட்டங்களாக மக்கள் புரிந்துகொண்டார்கள். கை ரிக்ஷா ஒழித்து ரிக்ஷா கொடுத்தது, ‘ரிக்ஷாகாரன்’ எம்.ஜி.ஆர் தான் என ரிக்ஷாகாரர் புரிந்கொண்டதைப்போல். இந்தப் புரிதல் எம்.ஜி.ஆர் மரணம் வரை மட்டுமல்ல கலைஞர் மரணம் வரை நீடித்தது என்பது தமிழ்நாட்டின் அவலம்.
மீண்டும் கலைஞர் ஆட்சிக் கலைப்பு
அதுபோலவே, 1991 ஆண்டு கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டதும் திட்டமிட்ட சதி. கலைஞர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரும் இல்லை. எதிர்ப்பாளரும் இல்லை. 1989ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி, கலைஞரிடம் அனுமதி பெறாமல் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து 23 நாட்களுக்குப் பிறகு திரும்பினார் வைகோ.
அதைப் பிரதானமாக வைத்தும், பிரதமர் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட வி.பி.சிங்கிற்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தியதை உள் காரணமாகக் கொண்டும் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியால் நேரடியாகக் கலைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சிதான். அந்த ஜனாதிபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பது மிக முக்கியமானது.
1989ல் முதல்வராக கலைஞர், பெண்களுக்குச் சொத்தில் உரிமை, சத்துணவில் முட்டை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர்மரபினருக்கு 20 சதவிகிதம் உள்ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், காவிரிப் பிரச்சனைக்காக நடுவர் மன்றம், முதல் பட்டதாரிகளுக்கு இலவச பட்டப் படிப்பு, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகிதம் ஒதுக்கீடு எனப் பல திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆனாலும் 1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்கடிக்கப்பட்டது.
தொண்டர் பலம்
தி.மு.க. ஆட்சியில் இருந்த காலங்களைவிட ஆட்சியில் இல்லாத ஆண்டுகள்தான் அதிகம். அதிலும் 1991-1996 சட்டசபையில் இரண்டே இடங்கள் மட்டும்தான். ஒருவர் கலைஞர். மற்றொருவர் பரிதி இளம்வழுதி
2011ல் 3ஆவது இடம். எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.
இப்போது, அ.தி.மு.க 66 இடங்கள் இருக்கும்போதும் ‘அ.தி.மு.க அழிந்தால் அது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. அதனால் அ.தி.மு.க.வைப் பாதுகாக்க வேண்டும்’ என்று பதற்றப்படுகிற பலர் அன்று தி.மு.க. இல்லையென்றால் தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல எனச் சொல்லவில்லை.
2018 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் உட்பட பலர் டெபாசிட் தொகையை இழந்தனர். தினகரன் வெற்றிபெற்றார். அவர் எப்படி வெற்றிபெற்றார் என்பதை நாடறியும். அப்போதும் தினகரனைத்தான் கொண்டாடினார்கள் நடுநிலையாளர்கள். தி.மு.க. விற்காகக் கவலைப்படாத அவர்கள்தான் இப்போது, அ.தி.மு.க.விற்காக அழுகிறார்கள்.
தி.மு.க. மீதான இந்தக் காழ்ப்புணர்ச்சிதான் அ.தி.மு.க மீதான பாசமாக அல்லது தி.மு.க.வை யார் எதிர்க்கிறார்களோ அவர்களை ஆதரிப்பதாக இருக்கிறது.
1978 எம்.ஜி.ஆர் ஆட்சி, அவ்வளவுதான் தி.மு.க. என்றார்கள். 1991 தேர்தலோடு முடிந்தது தி.மு.க. என்றும் 1993 வைகோவின் தனிக்கட்சியால் தி.மு.க.விற்கு முடிவுரையும் எழுதினார்கள் தி.மு.க. எதிர்ப்புத் திராவிட அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்களே.
ஆனால், தி.மு.க.வை ஒழிப்பதற்கு விஜயகாந்த் வரை முயன்றவர்கள்தான் காணாமல் போயிருக்கிறார்கள்.
இப்போதும் நடுநிலையாளர்கள், தி.மு.க.வை விமாசிக்கும்போது கலைஞரை, தளபதி ஸ்டாலினை, திராவிட முன்னேற்றக் கழத்தை பெயர் சொல்லி கடுமையாக விமர்சிப்பார்கள். ஜெயலிலதா, எடப்பாடி ஊழல்களை அ.தி.மு.க பெயரைச் சொல்லாமல், ‘திராவிட இயக்கத்தின் லட்சணம் இதுதான்’ என அதையும் தி.மு.க. கணக்கில் எழுதுவார்கள்.
எதிரிகள், துரோகிகள், நடுநிலையாளர்கள், சில நேரங்களில் பெரியார் உணர்வாளர்கள் எனப் பல புனைபெயரில் இருக்கும் தி.மு.க. எதிரிகள் சரணடையும் அளவில் 75 ஆண்டுகளைத் தாண்டி ‘இனி எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது’ எனத் தி.மு.க பிரம்மாண்டமாக நிற்பது எதனால்? தோல்வியிலும் கலைஞர் உடன் நின்ற கொள்கை சார்ந்த தொண்டர்களால்.
பெரியரோடு முரண்பாடும் பெரியாரிய பின்புலமும்
பெரியாரிடமிருந்து முரண்பட்டு, 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாளில் தி.மு.க.வை தொடங்கிய அண்ணா, திராவிடர் கழகத்தின் தொடர்ச்சியாகத் தி.மு.க.வைக் கட்டமைக்கவில்லை. தேர்தல், ஆட்சி, அதிகாரத்தில் பங்கெடுக்க முடிவுசெய்ததால் நீதிக்கட்சியின் நீட்சியாக அறிவித்தார்.
1957ல் தேர்தலில் பங்கெடுக்க ஆரம்பித்து 1967ல் ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. அண்ணாவிடம், ’10 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது எப்படி? எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘இது 10 ஆண்டுகளில் நடந்ததல்ல. எங்கள் பாட்டன் நீதிக்கட்சிகாரர்கள் ஆட்சியை ஆரம்பித்து வைத்தார்கள். அதன் நீட்சியாக நான் வந்திருக்கிறேன்’ என்றார் அண்ணா.
ஆட்சி நிர்வாகத்தை இடஒதுக்கீட்டை சட்டமாக்கும் முறையை நீதிக்கட்சியிடமிருந்து பெற்றுக்கொண்ட தி.மு.க. அதற்கு மேல் பெரியாரிய கண்ணோட்டத்தைத் தன் கட்சிக்கும் ஆட்சிக்கும் கவசமாக அமைத்துக்கொண்டது.
பெரியாரின் இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, போன்றவற்றிலிருந்து மாறுபட்டு, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ எனத் தி.மு.க.வில் இறைவழிபாட்டிற்குத் தடையில்லை. மத அடையாளங்களோடு இருந்துகொள்ளலாம் என நீதிக்கட்சியின் பாணியைத் தொண்டர்களுக்கு அறிவித்தது.
ஆனால், கட்சியின் தலைமையில் இருப்பவர்கள் ஜாதி, மத அடையாளங்களோடு இருக்கக் கூடாது. தீபாவளி உட்பட தமிழ் விரோத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக்கூடாது எனப் பெரியாரிய சாயல் கொண்டதாக அமைத்துக்கொண்டது.
அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘நான் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன். பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் என்று பெரியாரிஸ்ட்டாக அல்ல. பெரியாரிய ஆதரவாளராக அடையாளப்படுத்திக்கொண்டார்.
இருந்தாலும் சிறுபான்மை மக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது என்கிற முறையை அண்ணா அறிமுகப்படுத்தினார். காரணம், பெரும்பான்மை சமூகத்திலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள் இருப்போம் என்று அறிவிக்கவே.
தி.மு.க.வின் இந்த நிலை எவ்வளவு சிறப்பானது என்பதற்கு இந்திய அளவில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களிலேயே சொந்த வீட்டிற்குள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இந்து சமுதாய மக்கள் எப்படிப் புழங்குகிறார்களோ அதுபோல்தான் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். இது பெரியாரியல் பின்புலம் கொண்ட தி.மு.க.விற்கு மட்டுமே உரிய சிறப்பு: கட்சியின் கட்டமைப்பு இது.
ஆட்சிக்கு வந்த உடனேயே அண்ணா போட்ட உத்தரவுகளில் முதன்மையானது, ‘அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களுக்கு அனுமதியில்லை’ என்பது பெரியாரிய கண்ணோட்டம் கொண்டதுதான்.
எழுச்சிமிகு தி.மு.க.வின் தமிழ் உணர்வு
நீதிக்கட்சி ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் அந்தக் கட்சி தமிழ் உணர்வு கொண்ட கட்சியல்ல. நீதிக்கட்சியின் தலைவர்கள், தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் புரோகிதரைக் கொண்டே திருமணம் உட்பட எல்லாவற்றையும் நடத்திக்கொண்டவர்கள்தான்.

ஆனால், தி.மு.க.வின் மிக முக்கியமான கொள்கையே தமிழ் உணர்வு தான். தமிழை ஆதிக்கம் செய்கிற சம்ஸ்கிருத, இந்தி எதிர்ப்பு என்ற போர்க்குணம் கொண்ட தமிழ் உணர்வு. திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்கள்.
பிற்காலச் சோழர்களிலிருந்து மூவேந்தர் காலந்தொட்டே, தமிழ் மன்னர்களுக்கே தமிழ்ப் பெயர்கள் இல்லாத நிலையிருந்தது. 1000 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக எளிய உழைக்கும் தமிழர்களுக்கும் சமய சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தி.மு.க. தான்.
தி.மு.க.விற்கு முன் தமிழறிஞர்கள் சைவம், வைணவம் சமயம் சார்ந்திருந்தார்கள். தமிழையே இந்து சமயத்திற்குள் அடக்கினார்கள். தேவாரம்,திருவாசகம், கம்பராமாயணம், பெரியபுராணம் என்று மட்டும் அடையாளப்படுத்தப்பட்டது. தமிழைச் சமயச் சார்பற்ற இலக்கியங்களைத் தமிழர் அடையாளமாக நிறுவினார்கள் தி.மு.க வினர்.
அதில் கலைஞரின் பங்களிப்பு மகத்தானது. புறநானுறு, அகநானூறு, கலிங்கத்துப்பரணி எனத் தமிழைச் சமயச் சார்ப்பற்ற வீரத்தின் அடையாளமாக நிறுவினார்.
சிலப்பதிகாரத்தைக் கம்பராமாயணத்திற்கு மாற்றாக, அதிகாரத்திற்கு எதிரான குரலாக, அண்ணாவும் கலைஞரும் நிறுவினார்கள். அவர்கள் சீதை என்றபோது, இவர்கள் கண்ணகி என்றார்கள். அவர்கள் ராமன் என ஜெபித்தபோது, இவர்கள் திருவள்ளுவர் என்றார்கள்.
புலவர்கள் மத்தியில் மட்டுமே இருந்த திருக்குறளை, தெருவெங்கும் கொண்டு சேர்த்தார் கலைஞர். தமிழைப் பிழையோடு எழுதத் தெரிந்தவர்களையும் திருக்குறளின் சிறப்புகளைப் பேசவைத்தார். திருக்குறளையே படித்திராதவர்களும் திருக்குறள் சிறப்புகளைப் பேசினர். காரணம், கலைஞரின் அலை.
விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை
தமிழே இல்லாத தமிழர்களின் கல்யாணங்களில் ‘திருமண அழைப்பிதழ்’ என மாற்றித் தமிழர்களின் திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளைக் கட்டாயமாக்கியது, தி.மு.க.
வள்ளுவரை தமிழ்நாட்டின் அடையாளமாக்கினார் கலைஞர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைதான் தமிழ் எல்லையாக இருந்தது. அதன் அருகில் பெரிய கோடுபோட்டு, அதைச் சின்னதாக்கி, அவர் அமைத்த வள்ளுவர் சிலை, திருவள்ளுவரை இந்திய எல்லையாக உயர்த்தியது.
தி.மு.க.விற்குப் பிறகுதான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தமிழ் இலக்கியங்கள் நமக்கானது, வள்ளுவர் நமக்கானவர் என்ற உணர்வு நிலைக்குப் பெரும்பான்மையாக வந்தனர்.
வள்ளுவருக்கான சிறப்பு, தமிழர்கள் மத்தியில் கலைஞரால் முக்கியத்துவம் பெற்றதால்தான், இன்று இந்துத்துவவாதிகள் வள்ளுவரைத் தங்களுக்கானவர் என உரிமை கொண்டாடவேண்டிய அடையாள அரசியலுக்குள் அவரை நிறுத்துகின்றனர்.
கலைஞர் வள்ளுவரை உயர்த்திப்பிடிக்காமல் இருந்திருந்தால், தமிழர்கள் தலையில் செங்கல்லை வைத்து, அயோத்தி கரசேவைக்கு அனுப்பியிருப்பார்கள். அந்த அளவிற்கு இலக்கியங்கள் வழியாகத் தொண்டர்களையும் அரசியல்படுத்தினார் கலைஞர்.
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…
கடிதத்தில் உடன்பிறப்புகளுடன் அவர் நடத்திய உரையாடல், மேடையில் உடன்பிறப்புகளுக்காகவே அவர் எடுத்த அக்கறை, ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று அவர் அழைக்கும்போது, ஒவ்வொரு தொண்டரும் ‘என்னைத்தான் சொல்கிறார் தலைவர்’ என உணர்ச்சிவசப்பட்ட நிலை இதுதான் தி.மு.க.வின் அசைக்க முடியாத அஸ்திவாரம்.
அவரின் பொதுக்கூட்ட மேடைகள், மாலை நேர வகுப்புகள். தமிழ் இலக்கியம் தொடங்கி, உலக வரலாறு வரை நீளும் அவரின் பேச்சுகள், கல்வியறிவு குறைந்த தொண்டர்களையும் நுட்பமாக அரசியல்படுத்தியது.
பெரிய அதன் சாயல் துளிகூடத் தெரியாமல்மறுநாளே, நம்பிக்கையூட்டி, அடுத்த வேலைக்கு ஆயத்தப்படுத்தி, தி.மு.க.வின் தோல்வி தற்காலிகமானது. பெரிய வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்தியது.
வெற்றியோ, தோல்வியோ தேர்தல் அரசியலையும் தாண்டி மொழி உணர்வு, பெண் உரிமை, சிறுபான்மை மக்கள் நலன், இடஒதுக்கீடு எனச் சமூக நீதி அரசியலை ஆரிய எதிர்ப்போடு திராவிடத் தத்துவப் பின்னணியில் உரத்துப் பேசுகிற ஒரே கட்சி, தி.மு.க. மட்டுமே.
இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, இடஒதுக்கீட்டுக்கு எதிரான 10 சதவிகித ஒதுக்கீடு, வேத காலக் கல்வி என ஆரிய தத்துவப் பின்னணியில் அரசியல் நடத்தும் பாஜகவைப் பண்பாட்டுரீதியாகவும் எதிர்க்கிற ஒரே கட்சி இந்திய அளவில் தி.மு.க. மட்டும்தான்.
75 ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாகத் தி.மு.க. வில் தொடரும் அரசியல் அறிவு, உணர்வு, இது. அதன் நீட்சியாகதான் தி.மு.க. வின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலே எந்தக் கட்சியும் செய்யாத ஒரு சிறப்பைக் கட்சிக்குள் செய்தார்.
தொண்டர்களுக்கு, அடுத்த தலைமுறை தலைமையான தி.மு.க.வின் இளைஞரணிக்குத் தத்துவார்த்தப் பயிற்சியாக நூற்றாண்டுக் கால திராவிட அரசியலைப் பெரியாரிய கண்ணோட்டோத்தோடு, ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ வகுப்புகளை 234 தொகுதிகளிலும் நடத்தினார். தேர்தல் அரசியலைத் தாண்டிய செயல்பாடு இது.
தென்றலைத் தீண்டியதில்லை தி.மு.க. ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறது
மொழிப்போரில் அது பற்றவைத்த தீ எப்போதும் நெருப்புத் துண்டாகப் புகைந்துகொண்டே இருக்கிறது.
75ஆவது ஆண்டில் அதை மாபெரும் ஜோதியாக்கி இந்தியாவிற்கே ஒளிகாட்டும் விளக்காக உயர்த்திப்பிடிக்கிறார், திராவிட மாடல் நாயகன் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அவர் நடத்தும் மொழிப்போர், இன்று இந்தியாவையே வழி நடத்துகிறது.
பள்ளிகளில் இந்தியை ஏற்றுக்கொண்டால்தான் பணம்’ என ஒன்றிய பா.ஜ.க அரசு அவரிடம் வம்படி செய்தபோது, ‘நீ எத்தனை கோடி கொடுத்தாலும் என் குழந்தைகளின் கல்வியைச் சீரழிக்க மாட்டேன். உன்னால் ஆனதைப் பார்’ என அவர் பற்றவைத்த நெருப்புதான் இன்று இந்தியா முழுக்கப் பற்றி எரிகிறது.
நான்கு ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், தி.மு.க.விற்கு மிக அதிகமான புதிய வாக்காளர்களை அதுவும் இரட்டை இலைக்கு வாக்களித்த பெண்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் காத்திருக்கிறார்கள். 40 ஆண்டுகளில் இல்லாத புதிய ஒளியை தி.மு.க.விற்கு ஏற்படுத்தியிருக்கிறார். முதல்வர் திராவிட மாடல் நாயகன் தளபதி ஸ்டாலின் அவர்கள்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என அவர் பா.ஜ.க அரசோடு தொடர்ந்து சண்டை செய்வதால்தான், எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது எதிரிகள் அதிகமாகியிருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு.
ஆனால், தோற்கடிப்பதற்குத்தான் யாருமில்லை. எவ்வளவுபேர் இணைந்தாலும் இனி எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது.
காரணம், தி.மு.க தேர்தலை மையம் கொண்டு மட்டும் இயங்கும் கட்சியல்ல, திராவிட அரசியலை உயர்த்திப்பிடிக்கும் தொண்டர்களையும் தலைவர்களையும் கொண்ட ஒரே கட்சி.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் நடக்கும் இந்தப் பண்பாட்டுப் போரில், ஆரியத்தை வீழ்த்திய பிறகும் திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது ஆரிய எதிர்ப்பு மட்டுமல்ல எளிய மக்களின் வாழ்வியல் தத்துவம்.
திராவிடம் இருக்கும் வரை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகமும் இருக்கும்.


