அதிமுகவுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது! அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தீரன் சின்னமலை அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுகவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திமுக என்பது ஒரு ஊழல் கட்சி, அவர்கள் குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என்று நினைத்து நிலையில் அதிமுக என்ற இயக்கம் உருவானது. திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை தற்பொழுது வெளியிட்டுள்ள நிலையில் வெளியிட்டது மட்டுமல்லாமல் அந்த பணத்தை பறிமுதல் செய்து பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கலாம். அணைகளை கட்டலாம், பல நலத்திட்டங்களை செய்யலாம் .
அண்ணாமலை இன்று தான் சொல்கிறார். ஆனால் நாங்கள் வாழ்நாள் முழுவதும் திமுக ஊழல் கட்சி என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். திமுக சார்பில் மன்னிப்பு கேட்க சொன்னதற்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும். அதிமுகவுடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல தான். அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம். ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள். மடியிலே கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு தைரியமாக சொல்கிறேன் எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் நாங்கள் அதை எதிர் கொள்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் பாஜக இருக்கிறது ஆக பாஜக அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது” என்றார்.