ரூ.500 கோடி ரூபாய் மதிப்பிலான பரந்து விரிந்துள்ள அரண்மனையை முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஊதாரித்தனமாக செலவு செய்து கட்டியதாக குற்றம்சாட்டியதால், மீண்டும் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம், ரிஷிகொண்டா பேலஸை நேரில் சென்று பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஜெகன் மோகன் கட்டிய அரண்மனை பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும், மக்கள் கருத்து கேட்டு அந்த கட்டிடத்தை என்ன செய்வது என முடிவு எடுக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரிஷிகொண்டா மலையை குடைந்து ஜெகன்மோகன் தங்குவதற்காக முதல்வர் முகாம் அலுவலகம் அமைக்க ₹ 500 கோடியில் அரண்மனையை போன்று பிரம்மாண்ட கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முதன்முறையாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘ஜனநாயக நாட்டில் ரிஷிகொண்டா போன்ற கட்டிடங்கள் கட்டப்படுவது ஆச்சரியமாக உள்ளது. கனவில் கூட இதுபோன்ற கட்டிடங்களை கற்பனை செய்ய முடியாது.
இந்த கட்டுமானங்கள் அவரது சொந்த நலனுக்காக செய்யப்பட்டன. சுற்றுச்சூழல் அத்துமீறல், வெளியுலகம் தெரியாமல் இருக்க ரகசியமாக மலையை குடைந்து இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. ஊடகங்கள் இந்த விஷயத்தை வெளிப்படுத்த முயன்றாலும் அப்போது யாரையும் அனுமதிக்கவில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம் சென்றும், மத்திய அரசு தலையிட்டாலும் அத்தனை தடைகளை மீறி இந்த கட்டுமானம் செய்யப்பட்டது. அப்போது ரிஷிகொண்டா அரண்மனையை பார்க்க வருவேன் என்று சென்னபோது என்னை அனுமதிக்கவில்லல்லை. ஜனசேனா தலைவர் பவன் கல்யாணை, பாஜக தலைவர்களை வரவிடாமல் தடுத்தனர்.
இன்று நேரிடையாக வந்து பார்த்த பின்னர் இந்தக் கட்டிடத்தை என்ன செய்வது என்று புரியவில்லை. ஜெகன் போன்றவர்கள் அரசியல் அமைப்பில் இருக்க கூடாதவர்கள். ஒரு முதல்வரின் ஆடம்பரத்திற்காக சுற்றுச்சூழலை அழித்து கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு சந்திரகிரி அரண்மனை, விஜயநகரம் அரண்மனை, மைசூர் அரண்மனை, நிஜாம் அரண்மனையைப் பார்த்தோம். இத்தகைய அரண்மனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கின்றன. ஆனால் இப்போது ஜெகன் கட்டிய அரண்மனையை பார்த்தால் தலை சுற்றும்.
பொதுமக்கள் பணத்தில் இப்படி ஒரு அரண்மனையை கட்டியது வருத்தம் அளிக்கிறது. அரண்மனையைப் பார்த்தவுடன் முதலில் உணர்வது ஆச்சரியம்தான். வட ஆந்திராவில் பாசனத்திற்கு 400 கோடி செலவிடப்படவில்லை. ஆனால் ஒரு அரண்மனைக்கு மட்டும் ₹500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டும் போது சுற்றுலாத்துறை கட்டடம் என்று மக்களை நம்ப வைத்தனர்.
பின்னர் ஆட்சி மாற்றத்தால் சர்ச்சை எழுந்ததால் பிரதமர், ஜனாதிபதியின் இல்லத்துக்காக கட்டப்பட்டது என்று பேச்சை மாற்றினார். ஆனால் அவர்கள் அத்தகைய அரண்மனைக்கு வர விரும்பவில்லை. ஜெகனின் மனநிலை யாருக்கும் புரியவில்லை. 13,540 சதுர அடியில் கட்டப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா மலை ப்ளூ ஃபாக் பீச் ( நீல கடற்கரை ) கொண்ட விசாகப்பட்டினத்தின் அழகான பகுதியாகும். இங்கு கஜபதி பிளாக்கில் அலுவலக வளாகம் கட்டப்பட்டது. இதில் ஆடம்பரத்துடன் கட்டப்பட்டது. கலிங்கத் பிளாக்கில் 300 பேர் அமரும் மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள காரிடாரைப் பார்த்தால் வெள்ளை மாளிகை போன்று இருக்கிறது. அரண்மனையில் இருப்பது போன்று ஒரு பிளாக் கட்டப்பட்டுள்ளது. 200 டன் ஏ.சி.யுடன் கட்டப்பட்டது என்றால் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? தண்ணீரை போன்று வாரி இரைத்து அரசு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. நிலம் சர்வே கணக்கெடுப்புக்கு என கூறி பல கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ராஜ்யத்தைத் துறந்த மன்னர்களைப் புராணங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜெகன் மோகன் பொதுப் பணத்தை ஆடம்பரத்துக்குப் பயன்படுத்தி ராஜ அரண்மனையைக் கட்டியுள்ளார். அனைவரது கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்கப்படும். இந்த அரண்மனையை மக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மக்கள் என்றால் கொஞ்சம் பயப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஜெகன் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டும். தலைநகரை விசாகப்பட்டினத்தில் வைப்பதாக மக்களை ஏமாற்றிய பெருமை ஜெகனுக்கே உரியது. மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தெலுங்குதேம் வென்ற நகரம் விசாகப்பட்டினம். என் மீது வைத்த நம்பிக்கை வீணாகாமல் ஆட்சி செய்வேன். அரசியல்வாதியான ஜெகன் இப்படிப்பட்ட தவறான செயல்களைச் செய்வார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஜனநாயகவாதிகள் அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என அவர் பேசினார்.
அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் கண்டுலா துர்கேஷ் மற்றும் பீமிலி எம்எல்ஏ காண்டா சீனிவாச ராவ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.