தமிழ்நாட்டிலும் பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போன்று வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் “வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பா. சிதம்பரம், கடந்த தேர்தல்களில் பல இடங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு காரணம் வாக்கு திருட்டே எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்ததற்கான ஆதாரங்களை விரைவில் ராகுல் காந்தி வெளியிட உள்ளார் என்றும், அதே நிலை தமிழ்நாட்டிலும் நிகழக்கூடும் என அவர் எச்சரித்தார். இதற்கான சதி வேலைகளை பாஜக செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் அடுத்த 8 மாதங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்து உரையாற்றிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், வாக்கு திருட்டுக்கு எதிராக 5 கோடி கையெழுத்து இயக்கம் நடந்து வருவதாகவும், ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு நாடு முழுவதும் முன்னோடியாக திகழ்கிறது என்றும் பாராட்டினார்.
மேலும், வரவிருக்கும் அடுத்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாடு வருவார்கள் என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். மாநாட்டில், பாஜக முறைகேடுகளுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.