அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும். அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரம் குறித்து ஆதாரப்பூர்வமாக மனு கொடுத்துள்ளதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை, பரிசீலனை செய்து வருகிறோம் என்று கூறுகின்றனர். அம்மா உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லை என்று கூறினால் ஆதாரம் கொடு என்று கேட்கிறார்கள். மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவந்தது அதிமுக தான். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிற்றுண்டி திட்டத்திற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுள்ளது. விடியா ஆட்சியில் விழுப்புரத்தில் கஞ்சா போதையில் படுகொலை நிகழ்ந்துள்ளது. நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கையிலேயே அதிமுகவின் திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.” என சாடினார்.


