”கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டுள்ளார்.
மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் இருப்பது கருத்தியல் நட்பு. திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஆன உறவானது கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன்முதலாக தந்தை பெரியார் மொழிபெயர்த்து வெளியிட்டதில் இருந்து தொடங்குகிறது.
தன்னை கம்யூனிஸ்ட்டாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர் தலைவர் கலைஞர். என் பெயரும் ஸ்டாலின். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள், மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள், வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதற்காக தொடர்ந்து போராடுகிறோம். மாநில சுயாட்சி என்பதே திமுகவின் உயர் கொள்கை கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய அரசுக்கு அலர்ஜியாக உள்ளது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநிலங்களில் சுயாட்சி இருக்கும். ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தியாக வேண்டும்.
அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதினால்தான் கூட்டாட்சி மலரும்” எனத் தெரிவித்தார்.