பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை-ராகுல் சாடல்
இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் தலைவரால் பல்கலைகழகத்தில் கூட சுதந்திரமாக உரையாற்ற முடியவில்லை என லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, கேம்பிரிஜ்ட் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இதனிடையே, லண்டனில் இந்திய வெளிநாடு காங்கிரஸ் பிரிவு ஏற்பாடு செய்திருந்த, புலம் பெயர்ந்த இந்தியர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர், என்னை எந்த அளவிற்கு அதிகமாக தாக்குகிறார்களோ, அந்த அளவுக்கு தனக்கு நல்லது என்றும், எதிரிகளின் தாக்குதலை தான் புரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஆட்சியாளர்களுக்கும், தனக்கும் இடையிலான சண்டை தைரியத்திற்கும், கோழைத்தனத்திற்கும் இடையிலானது என்றும், அன்புக்கும், வெறுப்பிற்கும் இடையிலான சண்டை என்றும், பலத்த கைதட்டல்களுக்கு இடையே அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரு இந்திய அரசியல் தலைவரால் பல்கலைகழகத்தில் கூட சுதந்திரமாக உரையாற்ற முடியவில்லை என்றும், எதிர்கட்சிகளின் கருத்தை ஏற்கவோ, விவாதிக்கவோ இந்திய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.