2026 சட்டப்பேரவை தேர்தலில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, “சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். இளம் தலைமுறையினரை எளிதாக ஏமாற்றிவிட முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போன்ற புதிய புதிய வரவுகள் தேர்தல் காலத்தில், நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் கூட அவர்களால் பெரியளவில் சாதிக்கமுடியவில்லை. உரிய முடிவுகளை தேர்தல் உணர்த்தும்.
எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகரும் இருக்காது; இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போன்ற புதிய புதிய வரவுகள் தேர்தல் காலத்தில், நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் கூட அவர்களால் பெரியளவில் சாதிக்கமுடியவில்லை. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மும்மொழி கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை உள்ளதை மத்திய அரசு நன்றாக அறியும்.
தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் இந்தி மொழியை திணக்க மாட்டோம் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்தார். இந்தி அல்லாத பிற மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் தாய்மொழி ஆகியவை நடைமுறையில் உள்ளன. ஆனால் தற்போது மத்திய பாஜக அரசு மூன்றாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டத்தின் ஒன்றாக இந்தி திணிப்பு உள்ளது. ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்று இருப்பதைப் போல ஒரே நாடு ஒரே மொழி என்பதை அடைவதே அவர்களின் நோக்கம். இந்தியாவில் எத்தனை மொழிகள் இருந்தாலும் எத்தனை கலாச்சாரங்கள் இருந்தாலும் அனைத்தும் ஒரே மொழி ஒரே கலாச்சாரமாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நினைக்கிறது. இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசுபவர்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் அவர்கள் இந்தியை கற்றுக் கொண்டு பேச வேண்டும் என்ற நினைப்பில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லை என்ற நிலையில், திமுக, அதிமுக கட்சிகளை பலவீனப்படுத்தி விட முடியும் என பாஜக கணக்கு போடுகிறது. வடமாநிலங்களில் எங்கு தமிழ் கற்றுத் தரப்படுகிறது?” என அவர் கேள்வி எழுப்பினார்.