எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க சசிகலா தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளது அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்… கடைசியாகச் சொல்கிறோம்…
உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பேசிய வைகைச்செல்வன், ”எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார் சசிகலா.திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்” என வைகை செல்வன் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படித்தான் செய்திகள் பரவி வருகின்றன.
ஏற்கெனவே சசிகலா, ”2026 -ல் அம்மாவின் ஆட்சி அமைப்பது தான் எங்களின் இலக்கு. தமிழக மக்களுக்காக நிச்சயம் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களிடம் தலைவர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர். அதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதே என்னுடைய முழு நேர நிலைப்பாடு. 2026-ல் அதிமுக ஒன்றிணைய நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
அதிமுக விவகாரம் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவிப்பார்கள். ஆனால் எனக்கு 40ஆண்டு கால அனுபவம் உள்ளதால், நான் பொறுமையாகத்தான் தெரிவிப்பேன். பொறுத்திருந்து பாருங்கள். தனிப்பட்ட முடிவு என்பது மற்ற கட்சிகளில் எடுக்கலாம். ஆனால் எங்கள் கட்சியில் எடுக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், இறுதி எஜமானர்கள் மக்கள். அவர்கள் தீர்ப்பு கூறுவார்கள். அம்மாவின் வழியில் மக்களை நான் சந்தித்து வருகிறேன்” என்று சொல்லி வந்தார் சசிகலா.
இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்கும்போது காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் ஊராட்சியில் பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சசிகலா என்கிற வேறு ஒரு பெண்மணி பேசியதை வைத்து, எடப்பாடியார் தலைமையை சசிகலா ஏற்றுக் கொண்டதாக வைகைச் செல்வன் பேசியதாக வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.