விஜய் பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் அனைத்து துறை அலுவலர்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதாக தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை பகுதியில் நாளை நடைபெறும் விஜய் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ செங்கோட்டையன்,

தவெக தலைவர் விஜய் நாளை பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு நான்கு நாட்களில் மிகப் பிரமாண்டமான பணிகளை செய்துள்ளோம். இதற்கான அனைத்து துறைகளிலும் அலுவலர்கள் ஒத்துழைப்பை வழங்கினார்கள். தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை எஸ்.பி பார்வையிட்டு, தெரிவித்த அனைத்து பணிகளையும் செய்து இருக்கின்றோம்.
14 ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவசர சிகிச்சைக்கு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையான அளவிற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக 10 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 டிரோன், 60 சிசி டிவி கேமராக்கள் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேறு எங்கும் இதுவரை இந்த அளவிற்கு தலைவர் நிற்கும் இடத்திற்கு பாதுகாப்பு அரண் செய்திருக்க முடியாது. இது மற்ற மாவட்டங்களுக்கு ஒரு மாடலாக எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். QR, pass தேவையில்லை, மக்கள் தாங்களாகவே வந்து செல்லலாம். அண்ணாமலையின் கேள்விக்கு, இப்பொழுது பதில் சொல்ல நேரமில்லை. மற்றவர்களின் கருத்துக்கு பதில் சொல்லும் நிலை இப்போது இல்லை. அதற்கான நேரம் இல்லை. அதிமுக நிர்வாகிகள் நாளை இணைவது குறித்து இப்போது கூற முடியாது. அதற்கான வழிமுறைகள் உள்ளன. பேருந்து பிரசாரத்தில் இதற்காக திட்டமிட முடியாது. தலைவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்வோம் என்று கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பாமகவின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் – 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்


