- Advertisement -
தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக மாநில நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீதான ஊழல், மோசடி வேலைகளை சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்ட தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கெளரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்திமதி, துணை பொதுச்செயலாளர் அருள் பொதுச்செயலாளர் முரளி சங்கர் உள்ளிட்ட 23 நிர்வாகிகளில் 21 நிர்வாகிகள் பங்கேற்று கூட்டணி அமைக்கும் முழு அதிகாரம் மருத்துவர் ராமதாசுக்கு வழங்கினர். அதனை தொடர்ந்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகங்கள் அமைக்கவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு முழு அதிகாரத்தை இந்நிர்வாகக்குழு வழங்குகிறது. தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் இரா.அன்புமணி பா.ம.க. தலைவர் இல்லை என்பது உறுதியாகிறது. மருத்துவர் அய்யா அவர்களே பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வழிநடத்த முழு அதிகாரம் பெற்றவர் அய்யா தலைமையில் இன்று கூடிய நிர்வாகக்குழுவில் கூட்டணி குறித்தும், எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கலாம், அதில் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள், வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- கடந்த 12.12.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 10.5 இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசுக்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை. மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகக்குழு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சுமார் பத்து மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
- தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலை என்று அலைகிறார் அன்புமணி தலையை பிய்த்துக் கொண்டு தாறுமாறாக செல்கிறார். அத்தனை அவலத்திற்கும் தலையணை மந்திரம் ஓதியவர்களே பொறுப்பு. இதற்காக நிர்வாகக்குழு அன்புமணிக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு தலையணை மந்திரத்தில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. இல்லை என்றால் அன்புமணி மேலும் பல அவமானங்களையும் கேவலங்களையும் சந்திக்க நேரிடும் என்று நிர்வாகக்குழு எச்சரிக்கிறது.
- அன்புமணியின் துரோகத்தால் கட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளானது யார் தலைவர் யாருக்கு சின்னம் என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் கமிஷனும் அன்புமணியின் போலியான ஆவணத்தை ஏற்றுக்கொண்டு அவரோடு கை கோர்த்தது கண்டு அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். ஆனால் மருத்துவர் அய்யா அவர்கள் சற்றும் தயங்காமல், தளராமல் டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று கட்சியை அன்புமணி இடம் இருந்து மீட்டெடுத்தார். அதை இந்நிர்வாகக்குழு பெரிதும் பாராட்டி அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
- ஆரம்பத்தில் இருந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு நல்ல சட்ட ஆலோசனைகளை வழங்கி வருபவர் ஓய்வு பெற்ற நீதி அரசர் முனைவர் அருள் அவர்கள். தில்லி உயர் நீதிமன்றத்தில் முன் நின்று செயல்பட்டு நீதியை பெற்றமைக்கு அவருக்கும் அவரது வழக்கறிஞர்கள் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மருத்துவர் அய்யா அவர்கள் கட்சிக்கு ஒரு சிறப்பான நிரந்தர வழக்கறிஞர்கள் குழுவை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது.
- பாட்டாளி மக்கள் கட்சியின் இந்நெருக்கடியான சூழ்நிலையில் டெல்லி வரை சென்று அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட ஆர்ப்பாட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி கட்சியை மீட்டெடுக்க பெரிதும் செய்து பாடுபட்ட கௌரவ தலைவர் தியாகச் செம்மல் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
- அன்புமணியாலும் அவருடைய அடிப்பொடிகளாலும் அவசொல்லுக்கு ஆளாகி பல அவலங்களை சந்தித்து அன்றும் இன்றும் என்றும் அமைதி காத்து வரும் கௌரவ தலைவர் தியாகச் செம்மல், கௌரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் கொலை வெறி தாக்குதலில் உயிர் பிழைத்த பா.ம.க. இணைப் பொதுச் செயலாளர் அருள் எம்.எல்.ஏ. ஆகிய இருவருக்கும் குழு ஆறுதல் சொல்வதோடு மருத்துவர் அய்யா அவர்களோடு அன்றும் இன்றும் என்றும் இருப்போம் என்று அன்புமணிக்கு அறைவது போல பதிலளித்து வரும் இருவரையும் பெரிதும் பாராட்டுவதோடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
- வீரப் பெண்மணிகளாக ஜான்சிராணி, ராணி மங்கம்மாள், வேலுநாச்சியார் போன்றவர்களை போற்றி வருகிறோம். அதேபோல் நாம் நமது செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பரசுராமன் அவர்களை வீர தீர பெண்மணியாகவே பார்க்கிறோம். மருத்துவர் அய்யா அவர்கள் சொந்த மகனால் சொல்லொன்னா துயரத்தை அடைந்தபோது கவலைப்படாதீர்கள் நான் உங்களோடு இருக்கிறேன் என்று கூறி அன்புமணிக்கு அரைகூவல் விடுத்தார். சொந்த தம்பி சம்பந்தி என்ற உறவை விட அப்பா பெரிது அவர் உருவாக்கிய கட்சி அவரது லட்சியம் பெரிதென நினைத்து எதையும் எதிர்கொள்ள துணிந்து நேர்மை, நியாயம், தர்மத்தின் பக்கம் நின்று மருத்துவர் அய்யா அவர்களை தலை நிமிரச் செய்து, மனம் குளிரச் செய்த செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பரசுராமன் அவர்களை பாராட்டி இந்நிர்வாகக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்தில் அன்புமணிக்கும், அன்புமணியின் தலையணை மந்திரத்திற்கும் தலைவலியாக அமையப்போகும் ஸ்ரீகாந்தி பரசுராமன் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவாக இந்நிர்வாகக்குழு நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
- 46 ஆண்டுகள் உழைத்து 96,000 கிராமங்களுக்கு நடந்து உருவாக்கிய கட்சி. இதில் நீ தலையிட வேண்டாம் உனக்கு எவ்வித உரிமையும் இல்லை. நீ வேண்டுமானால் புதிதாக ஒரு கட்சியை உருவாக்கிக் கொள் நானே பெயர் வைக்கிறேன். எனது படத்தையும் எனது பெயரையும் பயன்படுத்தாதே என்று மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார். கையாலாகாத கள்ளத்தனமான அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியை களவாட பார்க்கிறார். வேடிக்கையான பேர்வழி, தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பெயரால் விருப்ப மனு வாங்குகிறார் கட்சியும், சின்னமும் எங்களிடத்தில் தான் உள்ளது என்று ஊரை ஏமாற்றுகிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவார் என்று பார்க்கலாம். மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னது போல் அன்புமணி அரசியல் கூடிய விரைவில் முடியப்போகிறது. பெற்ற தந்தைக்கே துரோகம் செய்தவர். கட்சிக்காரர்களுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டாரா. அன்புமணிக்கு உரிமை இல்லாத கட்சியின் பெயரில் விருப்பு மனு வாங்குவது அதன் மூலம் கல்லா கட்டுவதை இந்நிர்வாகக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
- ஒட்டுக்கேட்பு கருவி வைத்து சொந்த அப்பனுக்கு ஆப்பு வைக்கத் துணிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும், இன்று வரை எவ்வித நடவடிக்கை எடுக்காத காவல்துறையை இந்நிர்வாகக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
- அன்புமணியின் ஆட்டம், பாட்டம், ஆதாயம் அவைகளுக்காக அசைந்து, வளைந்து நெளிந்து கொடுத்த தேர்தல் ஆணையம். பொய்யான ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை இந்நிர்வாக்குழு கேட்டுக்கொள்கிறது.
- நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம் தலைவர் சம்பந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும், மோசடி வேலைகளையும் சேர்த்து சி.பி.ஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.
- பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்த போது, கைது செய்த விதம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் சட்டத்தை மீறியதாகவும், நீதிமன்றங்களின் வழிகாட்டுதலை மீறியதாகவும் தெரிகிறது. இது போன்ற நடவடிக்கைகளை காவல்துறை தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது என 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…


