கு.இராமகிருட்டிணன்

நம் தி.மு.க. ஆட்சியை இனியும் தொடரப் பாடுபடுங்கள்!

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 18 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. மந்திரிசபை பதவியேற்குமுன் தந்தை பெரியாரை திருச்சியில் சந்திக்கிறார், அறிஞர் அண்ணா. தி.மு.க. வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாட்டு அரசியலிலும் அச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏனென்றால், தி.மு.க. தோன்றிய நாள்தொட்டு 1967 ஆம் ஆண்டு தேர்தல் வரை தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்துவந்தவர், தந்தை பெரியார் அண்ணாவின் சந்திப்பிற்குப் பின்னால், தந்தை பெரியார் தி.மு.க.வை ஆதரிக்கிறார்.
அவர்கள் (தி.மு.க) என்னிடம் துவக்கம் முதல் இன்றுவரை தாட்சண்யமாக (நாகரிகமாகவே) நடந்துவந்திருக்கிறார்கள். நான் அவர்களை (ரிசர்வேஷன்) மீதி இல்லாமல் எவ்வளவு கண்டித்து, கடும் குறைவான வார்த்தைகள் பயன்படுத்திய காலத்தும் இவர்களில் (தி.மு.க. தலைவர்களில்) ஒருவர்கூட என்னைக் கடிந்தோ, குறை கூறியோ, எந்த விதமான குற்றம் சாட்டியோ, தரக்குறைவாகவோ ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது. இதை நாங்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறோம்.
எனது கொள்கை ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, அதுவரை (ஜாதி ஒழிப்பு பூரணமாக ஏற்படும் வரை) வகுப்புவாரி உரிமை. இவற்றிற்கு காங்கிரஸ் ஆட்சி எனக்கு கூடிய உதவிகூட செய்யவில்லை என்பதோடு, ஆட்சியில் காங்கிரஸ் குழுவில் பலர் எதிரியாகவும் இருந்தார்கள்.
இவர்கள் (தி.மு.க) உதவி செய்வார்களா என்றால், இன்றுவரையில் இவர்கள் இந்தக் கொள்கைக்கு மாறாகப் பேசியதாகக் காணவில்லை. இனியும் உதவி செய்யாவிட்டாலும் எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஏனென்றால், தி.மு.க. தலைவர்கள் எல்லோரும் பகுத்தறிவுவாதிகள். எல்லோருமே தமிழர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) இவர்கள் எளிதில் நம் கொள்கை விஷயத்தில் நம்மை எதிர்க்கவோ, தொல்லை கொடுக்கவோ வரமுடியாது (விடுதலை – 06.03.1967) என்பதாக ‘என் ஆதரவு’ என்ற அறிக்கையில் தி.மு.க.வை தந்தை பெரியார் ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்குகிறார்.
தி.மு.க. குறித்த தந்தை பெரியாரின் மதிப்பீடுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாததாக அறிஞர் அண்ணாவின் கருத்தும் அமைந்தது. 1967ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் தந்தை பெரியாரின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ‘அந்த வசந்தம்’ என்ற தலைப்பில் எழுதிய அறிஞர் அண்ணா, ‘ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு வேறெங்கும் இருந்ததில்லை.
அந்த ‘வரலாறு’ துவக்கப்பட்டபோது, நான் சிறுவன்.
அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாட்களிலே, ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். ‘அந்த நாட்களைத்தான் என் வசந்தம்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன்” என்று தந்தை பெரியாருடன் இணைந்திருந்த நாட்களின் மகத்துவத்தை தெரிவித்துவிட்டு,
நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்’ என்று தந்தை பெரியாரைப் பற்றி வியந்து பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியைத் தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்குகிறேன் என்று சட்டமன்றத்தில் அறிவித்து, சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் என்று தந்தை பெரியாரின் கொள்கைகளுக்குச் சட்டவடிவம் தந்தார், அறிஞர் அண்ணா.
‘அவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத ‘பழைமை’ உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்! எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது! ஏ… அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே, என்று இந்நாட்டை என்றென்றும்விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த ‘பழைமை’ அலறலாயிற்று. புதுப்புது பொருள் கொடுத்தும். பூச்சு மெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன என்றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதனை அறியாதார் இல்லை!
எனவேதான், ‘பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல. ஒரு சகாப்தம், ஒருகால கட்டம்… ஒரு திருப்பம்… என்று கூறுவது வாடிக்கை’ என்று தந்தை பெரியாரின் சமூகப்பணியை விவரிக்கிறார், அண்ணா.
அறிஞர் அண்ணா உடல் நலம் குன்றி அரசு மருத்துவமனையில் இருந்தபோது, அவரைப் பார்க்க தந்தை பெரியார் சென்றார்.
“பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, அண்ணாவின் வலது காதருகே குனிந்து, தன் வாயைக் காதில் வைத்து, ஏதோ சொன்னார். பிறகு, தன் மடியை அவிழ்த்து எதையோ எடுக்க முனைந்தார். அண்ணா, கையைக் கலைஞர் இருந்த திசையில் காட்டி, முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டு, ‘கருணாநிதிகிட்ட சொல்லுங்க அய்யா’ என்றார். மெல்லிய குரலில் மறுபுறம் நாற்காலியைத் திருப்பி, அய்யா கலைஞரின் கழுத்தில் தன் கையை வைத்து, அவர் தலையை வளைத்து, அருகே இழுத்து, “இதிலே இருவத்தஞ்சாயிரம் (ரூ. 25,000) பணம் இருக்குது. அண்ணாவுக்கு வைத்திய செலவுக்கு வச்சிக்குங்க!” என்றார். “இப்பப் பணம் இருக்குங்க அய்யா! அப்புறம் பாத்துக்கலாம்! நன்றி!” எனக் கூறினார், கலைஞர்.

தந்தை பெரியாரின் சிக்கனம் அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்ட தந்தை பெரியார், 25,000 ரூபாயைக் கொடுக்கிறார் என்றால், அறிஞர் அண்ணாவின்மீது, அவரின் கொள்கைப் பற்றின்மீது, தி.மு.க. ஆட்சியின் மீது அவருக்கிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அவரது 61 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய தந்தை பெரியார், ‘சரித்திரம் தோன்றிய நாள் முதல் – அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வருகிறவரை பார்ப்பானைப் பாதுகாக்கிற, பார்ப்பானுக்கு அடிமையாயிருக்கிற – பார்ப்பான் சொற்படி கேட்கிற, ஜாதியை, மதத்தை, கடவுளைக் காப்பாற்றுகிற ஆட்சிதான் இதுவரை நடந்ததே தவிர, மனித சமுதாயத்திற்கான ஆட்சி நடைபெறவே இல்லை. இந்தியாவிலேயே அண்ணா ஒருத்தர்தான் அந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தவராவார். அவர் மறைந்தாலும் அதே கொள்கைக்கேற்ற அமைச்சர்களை வைத்துக்கொண்டு இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி இங்குதான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டைத் தவிர ஆந்திரா, கேரளா, மைசூர், மற்ற மாநிலங்கள் எல்லாம் கலகம், கலவரம், பலாத்காரம் என்று தினசரி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டில்தான் அமைதியாக ஆட்சி நடக்கிறது. அதற்குக் காரணம் அண்ணாதான் ஆவார்.! (விடுதலை) 20.10.1969) என்று அண்ணாவையும் தி.மு.க ஆட்சியையும் பாராட்டினார்.
1970ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதி, தமிழ்நாடெங்கும் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி’ நடத்துவதென தந்தை பெரியார் அறிவித்து, அதற்கான வேலைகளை கழகத் தோழர்களும் தீவிரமாகச் செய்யத் தொடங்கினர். அப்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர்,
ஆலயங்களில் ஆண்டவன் திருமுன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட, அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த என் வேண்டுகோளைப் பெரியார் அவர்கள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்’ என்று 17.01.1970 அன்று அறிவித்தார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்று, தனது போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகத் தந்தை பெரியார் அறிவிக்கும்போது,
‘கிளர்ச்சியின் தத்துவத்தை நல்லவண்ணம் புரிந்து, அதற்குரிய வகையில் பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும் தமிழ்நாடு அரசினருக்கும் – முதலமைச்சருக்கும் அவரது அமைச்சரவையினருக்கும் நன்றி செலுத்துவதோடு, கிளர்ச்சியில் கலந்துகொள்ள உற்சாகத்துடன் முன்வந்துள்ள ஆயிரக்கணக்கான தோழர்களுக்கும், தாய்மார்களுக்கும் கிளர்ச்சிக்காக ஆதரவு காட்ட முன்வந்த அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்’ என்று தெரிவிக்கிறார்.
டாக்டர் கலைஞரும் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக’ சட்டம் இயற்றினார். ‘நமது ஜாதி இழிவை ஒழிக்கும் திட்டம் கலைஞர் ஒருவரிடம் தான் இருக்கிறது’ என்று தந்தை பெரியார் பாராட்டினார்.
டாக்டர் கலைஞர் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘தீவிரமாக முற்போக்குத்தனமான காரியங்களைச் செய்துவருகிறார். இன உணர்ச்சியுடன் நடந்துகொள்கிறார். பெரிய பெரிய உத்தியோகங்கள் எல்லாம் தமிழர்களுக்குக் கிடைக்கும்படியான வாய்ப்புகளை நம் கலைஞர் உருவாக்கிவருகிறார்’ என்றும் ‘எதிர்க்கட்சிக்காரர்கள் பிழைப்பு நடத்த முடியாத அளவுக்கு அவர்களுக்கு எல்லாம் வேலை இல்லாமல் கலைஞர் செய்துவிட்டார் என்றும் தந்தை பெரியார் புகழ்ந்தார்.
தந்தை பெரியார், ‘எப்பாடுபட்டாவது இன்றைய நம் தி.மு.க. ஆட்சியை இனியும் ஒரு பத்தாண்டுகளுக்கு நல்ல பலம் பொருந்திய ஆட்சியாக இருக்கப் பாடுபடுங்கள்’ என்று தனது 92ஆவது பிறந்த நாள் (17.09.1970) செய்தியாக தமிழர்களுக்கு அறிவுறுத்தினார்.
டாக்டர் கலைஞர் ஆட்சியைத் தந்தை பெரியார் பாராட்டி மகிழ்ந்தார். டாக்டர் கலைஞரோ, ‘இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னால் உலகத்தில் நேர்ந்த உண்மையான அற்புதம் எதுவெனத் தமிழர்களைக் கேட்டால், தந்தை பெரியார் அவர்கள் பிறந்ததுதான் என்று சொல்லத்தக்க அளவுக்கு தமிழகத்தின் வாழ்வில் தந்தை பெரியாரின் தொண்டும் அறிவுரையும் இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றன.
இன்றைக்குத் தொண்ணூற்றொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் பிறந்தநாளன்று, வானத்தில் விசேஷமாக விண்மீன்கள் பிரகாசித்தனவா என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
ஆனால், தமிழகத்தின் புதுமைச் சமுதாயம் – பிறந்ததின் அறிகுறியாக அவர் ஒளிமிக்க விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்’ என தந்தை பெரியாரின் ஒட்டுமொத்த சமூகத் தொண்டை, வாழ்வை விளக்கியுள்ளார்.
ஒருமுறை சட்டமன்றத்தில்… எதிர்க்கட்சியினர் கலைஞரின் ஆட்சியை விமாசிக்கும்போது, ‘இது மூன்றாம் தர ஆட்சி’ என்று கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அதற்காகக் கோபப்படாமல் பொறுமையாக, அதேசமயம் தான் கற்றுக்கொண்ட, ஏற்றுக்கொண்ட தந்தை பெரியாரின் தத்துவத் தெளிவோடு, ‘இது மூன்றாம் தர அரசு அல்ல. நாலாந்தர அரசு. ஆம். நான்காம் வருணமான சூத்திரர்களின் அரசு’ என்று பதிலளித்து, தி.முகவின் கொள்கை நிலைப்பாட்டை உலகறியச் செய்தார்.
தற்போதைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 100ஆவது நாளான 14.08.2021ல் அனைத்து சாதியைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்தார். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை நிறைவேற்றி தந்தை பெரியாரின், திராவிட இயக்கத்தின் நீட்சியாக தி.மு.க. இருக்கிறது என்பதை அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் உலகுக்கு உரக்கச் சொன்னார்.
திராவிட இயக்கக் கருத்தியலை நடைமுறைக்கு உள்ளாக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி பார்ப்பனர்களால் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. அதன் வெளிப்பாடாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஹெச். ராஜா, ‘கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின்’ ‘stalin is more dangerous than Karunanidhi’ என்று கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியின் திராவிட மாடல் செயல்பாடுகளுக்குத் தமிழர்கள் அளிக்கும் பாராட்டுரைகளைவிட, இன எதிரான பார்ப்பன ஹெச். ராஜாவின் பதட்டமே ஆகச் சிறந்த பாராட்டு. பார்ப்பனர்கள் நம்மை எதிர்க்கிறார்கள் என்றால் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பார் தந்தை பெரியார். அவ்வழியில் திராவிட மாடல் அரசும் தி.மு.க.வும் பார்ப்பனர்களின் கொதிப்பும் கொந்தளிப்புமே செயல்பட்டுவருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.
மூன்று தலைமுறைத் தலைவர்களின் வழிகாட்டுதலில் தந்தை பெரியார் சிந்தனைகளை உள்வாங்கி, வீறுநடை போட்டுவரும் தி.மு கழகத்தின் வருங்காலத் தலைமுறைத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உருவாகிவருகிறார்.
அவர், தானும் திராவிட இயக்க வழித்தோன்றல்தான் என்பதை இப்போதே நிரூபித்துவருகிறார்.
தந்தை பெரியாரிடம் இருந்த மனத்துணிச்சல் மரபு தி.மு.க.வின் நான்காம் தலைமுறைத் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சமீபத்தில் வெளிப்பட்டு, திராவிட இயக்கத்தின் உயிரோட்டம், பார்ப்பனர்களையும் எதிரிகளையும் கலங்கடித்தது. இதுவே, 75 ஆண்டுகளான தி.மு.க.விடம் இருக்கும் தனித்தன்மை.
‘சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக் கூடாது. டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க மாட்டோம். அதனை ஒழிக்கவே முயற்சிசெய்வோம். அதேபோல்தான் சனாதன தர்மமும். அதை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே சிறந்தது’ என்று பார்ப்பன எதிர்ப்பின் ஆணிவேரை, திராவிட இயக்க தத்துவத்தின் உச்சத்தை த.மு.எ.க.ச. மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளிப்படுத்திப் பேசினார்.
அவருடைய இந்தக் கருத்தை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் கொண்டாடினார்கள். பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் கொதிப்படைந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் அவர்மீது வழக்குத் தொடர்ந்தனர். தமக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது அவர் தாக்கல் செய்த மனு, அவருடைய உள்ள உறுதியை மட்டுமல்லாது, கொள்கை உறுதியையும் படம்பிடித்துக் காட்டியது.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்துகிறார்.

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறார்கள். நானும் அந்த சித்தாந்தத்தின் வாரிசுகளில் ஒருவன் என்பதால்தான் எனக்கு வாக்களித்து பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள்.
திராவிடக் கொள்கைகளையும் சித்தாந்தத்தையும் நான் பரப்ப வேண்டும். என்பது எங்கள் மக்களின் எதிர்பார்ப்பு. திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்பில் நான் இருக்கிறேன். நான் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியக் கொள்கைகள், திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்தவை. திராவிட முன்னேற்றக் இளைஞர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராகவும் பொறுப்பில் இருக்கிறேன். நான் பேசும் இக்கருத்துகள், அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் முன்மொழியப்பட்டவை. மகத்தான திராவிடத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை நாட்டுக்குத் தந்த டாக்டர் அம்பேத்கர் போன்ற என் முன்னோடிகளின் கருத்தைதான் நானும் பேசுகிறேன்!
தி.மு.க.வின் தத்துவங்களையும் அதனை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்பையும், அதற்கான உரிமையையும் சித்தாந்தங்களை உருவாக்கிய தலைவர்களையும் மிகவும் தெளிவான நோக்கில் அடையாளப்படுத்தி, தான் யார், தன்னுடைய இயக்கப் பணி என்ன, தான் கூறிய கருத்திலுள்ள ஆழமான சமூகக் கருத்து என்ன என்பதையெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தன்னுடைய பிரமாண வாக்குமூலத்தில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கியிருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் நீட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்று வேர்விட்டு, விழுதுவிட்டு விண்ணை மறைக்கும் ஆலமரமாய் நிமிர்ந்து நிற்கிறது. 75 ஆண்டுகள் கடந்து பவளவிழா கொண்டாடும் தி.மு.க, இன்னும் நீண்டகாலம் தந்தை பெரியாரின் கொள்கைத் தெளிவோடு, திராவிட இயக்க உணர்வோடு செயலாற்றவேண்டிய தயாரிப்புகளோடு வலம்வருகிறது. வருங்காலத்திலும் அவ்வியக்கம் அதேவழியில் செல்லும் என்ற நம்பிக்கையையும் நமக்கு அளிக்கிறது.
