மகாராஷ்டிராவின் முதலமைச்சர் யார் என்கிற இழுபறி நீடித்து வருகிறது. பாஜக சார்பில் முதலமைச்சர் பதிவிக்காக முன்னிருத்தப்படும் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் பதவி தொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முதலமைச்சர் பதவி தொடர்பாக எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்ததாக தெரிவித்துள்ளார்.
அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு அவர் மும்பை வருவார் எனக் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டுக்கான மகாராஷ்டிர சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கலாம்.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியும், அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்கிற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சர் பதவிக்கு பாஜக-வால் முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் கூட்டணிக் கட்சியான சிவசேனா அதன் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறது. அவரது அரசின் நலத்திட்டங்கள்தான் ஆளும் கூட்டணிக்கு அமோக வெற்றியை ஈட்ட உதவியதால், அவர் பதவிக்கு தகுதியானவர் என்று தலைவர்கள் கூறுகின்றனர்.
பீகார் மாதிரியை மேற்கோள் காட்டி, சிவசேனா செய்தித் தொடர்பாளர் நரேஷ் மஸ்கே, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று கூறினார். பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பாக செயல்பட்டாலும் நிதிஷ் குமார் முதல்வராக நீடிக்கிறார். பீகாரில் பாஜக எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், ஜேடி(யு) தலைவர் நிதிஷ்குமாரை முதல்வராக்கியது போல், ஷிண்டே முதல்வராக வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். மஹாயுதியின் மூத்த தலைவர்கள் (மகாராஷ்டிராவில்) இறுதியில் முடிவெடுப்பார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கக் கோரி சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அஜித் பவார் தலைமையிலான என்சிபி, பிஜேபிக்கு ஆதரவாக முதல்வர் பதவிக்கு ஃபட்னாவிஸை ஆதரிக்கிறது.
ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக 132 இடங்களை வென்றது, அக்கட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு, ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களை வென்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் அணி 41 இடங்களை வென்றது. ஆளும் கூட்டணியான மகாயுதி மொத்தம் 288 இடங்களில் 230 தொகுதிகளில் வென்றுள்ளது.