ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்திய மச்செர்லா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டியை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.


ஆந்திர மாநிலத்தில் மே 13ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது அப்போது பல்நாடு மாவட்டம் மச்செர்லா சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பால்வோகேட் என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்ற அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்துள்ளார். இந்த வீடியோ ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ மத்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது. அதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையர்கள் பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியை கைது செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து மூன்று தனிப்படை அமைத்து தேடிவந்தனர். ராமகிருஷ்ணா ரெட்டியை கைது செய்ய ஆந்திர போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதனையடுத்து தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் இருப்பதாக தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து அவர் அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்தது. இருப்பினும் அவரது டிரைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து எம்.எல்.ஏ. பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி விட்டுச் சென்ற பார்ச்சூனர், பொலேரோ, இன்னோவா ஆகிய வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி மகாராஷ்டிரா மாநிலம் பிதார் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் அம்மாநில போலீஸாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை பின் தொடர்ந்தனர்.
போலீஸார் பின் தொடர்வதை அறிந்த எம்.எல்.ஏ. அதற்குள் தனது திட்டத்தை மாற்றி சங்கரெட்டி மாவட்டம் இஸ்னாபூர் அருகே ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். அதனையும் கண்டுபிடித்த மச்செர்லா போலீசார் அங்கு வைத்து ராமகிருஷ்ண ரெட்டியை கைது செய்தனர்.
இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா கூறியதாவது தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை வெளிப்படையாகவும் ஜனநாயக முறைப்படி அமைதியாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் இது போன்று வேட்பாளர்கள் செய்வது தேர்தல் ஆணையத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும் என்று கூறினார்.

இது சட்டப்படி மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும். வீடியோ வெளியான பிறகு ராமகிருஷ்ண ரெட்டி அவரது ஆதரவாளர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக ராமகிருஷ்ணா ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.
தெலுங்கு தேச கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரம்மா ரெட்டி இதுகுறித்து கூறுகையில் பின்னெல்லி ராமகிருஷ்ணா எப்போதும் அராஜகத்துடன் வெற்றி பெற நினைப்பார். கடந்த தேர்தலிலும் அடாவடித்தனம் செய்து தான் வெற்றி பெற்றுள்ளார் என்றும் இந்த முறை தான் அவரது அராஜகம் வெளிவந்துள்ளதாகவும் பிரம்மா ரெட்டி கூறியுள்ளார்.
