மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது நடைபெற்று வரும் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சியில் கான்ராட் சங்மா முதல்வராக பதவியில் இருக்கிறார்.
கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது NPP, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் ஆட்சியமைத்த நிலையில், பின்னர் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது.

இந்நிலையில் இந்த முறை 60 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடும் என பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இந்நிலையில் வரும் 24ம் தேதி துரா பகுதியில் பிரதமர் மோடியின் பிரச்சார பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

அதற்காக, பாஜக சார்பில், P.A.சங்மா ஸ்டேடியத்தில் கூட்டம் நடத்த மாநில காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டேடியத்தில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை எனக் கூறி பிரதமரின் பிரச்சாரம் கூட்டம் நடத்த அரங்கு வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
மேகாலயாவில் பாஜகவின் வளர்ச்சியை பிடிக்காமல் ஆளும் அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பாஜக தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும் பிரதமரின் தேர்தல் பேரணி மற்றும் பிரச்சார கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், மாற்று அரங்கை இறுதி செய்து வருவதாகவும் மேகாலயா மாநில பாஜக பிரிவு அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடைபெற உள்ள மேற்கு கெரோ மாவட்டத்தில்தான் தேர்தலை சந்திக்கும் 60 தொகுதிகளில் 24 தொகுதிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


