மருத்துவர் ப.மீ.யாழினி
இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல; ஒவ்வொரு அடியிலும் அவள் பாதத்தைச் சுட்டெரிக்கும் வெம்மை கக்கும் தீப்பிழம்பு. ஓடுகிறாள் அவள் ஓடுகிறாள்! கையில் ஏந்தியிருப்பது தடகளக் கோலையல்ல, திராவிட இயக்கத்தின் தழல் தாங்கிய கோலை!
அவளைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு தலைமுறைப் பெண்களுக்கும் கிடைத்தது, திறந்த களம் அல்ல; வெம்மையான நெருப்புத் துண்டுகளும் மூச்சை அடக்கும் எதிர்ப்புகளுமே. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், தர்மாம்பாள் அம்மையாரும், மீனாம்பாள் சிவராஜ் அம்மையாரும் தடைகளைத் தகர்த்தெறிந்தனர். சத்தியவாணி முத்து அம்மையார் அந்தச் சுடரைக் கழகத்தின் உள்ளே ஏந்தி வந்தார், மகளிர் மன்றம் எனும் அமைப்புக்குள் ஏந்திச் சென்றார். மாணவி பருவத்திலேயே அந்தத் தழல்தாங்கிய கோலை ஏந்திக்கொண்ட மாணவி சற்குணம், பின்னொரு நாள் அமைச்சர் எஸ்.பி.சற்குண பாண்டியனாக உயர்ந்தார்.

கவிதையையும் அரசியலையும் ஒருசேர ஏந்திய கனிமொழி கருணாநிதி, தன்னை மௌனமாக்க முயன்ற உலகில் நெருப்பாறுகளை நீந்திக் கடந்தார். இன்று, தி.மு.க.வின் மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு அணி ஆகியவற்றில் உள்ள இளம்பெண்கள், இந்த ஓட்டத்தைத் தொடர்கின்றனர். அவர்களின் எதிரிகள் பத்திரிகைகளின் பழிச்சொற்கள் மட்டுமல்ல; சமூக ஊடகங்களின் முடிவற்ற வசைமாரிகளும் கூட ஆனாலும் அவர்கள் ஓட்டத்தை நிறுத்த யாராலும் முடியாது.

காட்சி 1: தடைகளைத் தகர்த்தெறிந்த தழல் வீராங்கனைகள்
ராஜாஜியின் கட்டாய இந்தி அறிவிப்புக்கு எதிரான மொழிப் போராட்டத்தின் உச்சம் 1938, நவம்பர் 13 அன்று நிகழ்ந்தது. தமிழ்நாடு பெண்கள் மாநாடு கூடியது. ஆயிரக்கணக்கான பெண்மணிகள் கூடி தங்கள் எதிர்ப்பைப் பிரகடனம் செய்தனர். அறிஞர் அண்ணாவின் மனைவி ராணிஅண்ணாதுரை அவர்களில் ஒருவர். அந்த மாநாடு, 23 தீர்மானங்களின் முழக்கத்தால் அதிர்ந்தது. ‘நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து தமிழர்களுக்குத் தாய்மொழியிலேயே கையெழுத்திடத் தெரியாத சூழலில், இந்தி கட்டாயம் என்பது என்னே அபத்தம்!’ என்று ஒரு தீர்மானம் இடிமுழக்கமிட்டது. ராஜாஜியின் திணிப்பை ஆதரித்த பிராமணப் பெண்களின் அமைப்பான ‘இந்திய மாதர் சங்கத்திற்கு’ மற்றொரு தீர்மானம் கண்டனம் தெரிவித்தது.
அப்போது, வரலாறாக மாறிய அந்தத் தருணம் வந்தது: மீனாம்பாள் சிவராஜ் அம்மையார், தமிழ் மொழிக் கொடியை விண்ணதிர ஏற்றி வைத்தார். அதே மூச்சில், அந்த மாமன்றம் அறிவித்தது: இனி, ஈ.வெ. ராமசாமி அவர்கள், ‘பெரியார்’ எனும் சிறப்புப் பட்டத்தாலேயே அழைக்கப்படுவார் என்று! அந்த மகுடத்தை அவருக்குச் சூட்டியவர்கள் பெண்கள்; தங்களின் புரட்சிப் பயணத்திற்குத் தலைமைதாங்கும் தலைவனாக அவரை அங்கீகரித்தவர்கள் பெண்கள்.
இங்கேதான் அந்த தீச்சுடர் பெண்களின் கரங்களுக்கு மாறியது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார். நாராயணி அம்மையார், வி.பி.தாமரைக்கண்ணி அம்மையார், பட்டம்மாள், சீதையம்மாள் மற்றும் பலர் – அத்தனை சமூகத் தடைகளையும் உடைத்தெறிந்து, தெருக்களில் இறங்கினார்; சிறையைத் தேடிச்சென்றனர்; சிறைகளை நிரப்பினர். என்.வி.என். நடராசனின் துணைவியார் புவனேஸ்வரி நடராசன். கையில் ஆறு மாதக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
பெண்களின் தொடரோட்டத்தின் முதல் களம் – தீயின் ஊடே, சிறையின் ஊடே பழிச்சொற்களின் ஊடே – வெற்றிகரமாக ஓடி முடிக்கப்பட்டது. கையில் ஏந்திய தீப்பந்தம், முன் எப்போதையும்விட பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது.
காட்சி 2: மகளிர் மன்றம் எனும் மூன்று காலங்கள் இணையும் களம்.
நவம்பர் 4, 1956. சென்னை, பெத்தநாயக்கன்பேட்டை.
டி.டி.வி. உயர்நிலைப் பள்ளி மைதானம், அந்த மாலை வேளையில், அலைமோதும் ஓர் அலைகடலைக் கண்டது. ஈராயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் காலடியோசை, தூசி பறக்கவைத்து, வானத்தை எட்டும் கூச்சலால் காற்றையே அதிரச்செய்தது. ஆனால், அது கேளிக்கைக்கான கூடுகை அல்ல; கணநேரக் கொண்டாட்டத்திற்காகவும் அல்ல. அது, வரலாற்றின் பாறைகளில் தங்கள் பெயரைப் பொறிக்கவந்த வீராங்கனைகளின் பேரணி. அன்றுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘மகளிர் மன்றம்’ என்ற பெருநெருப்பு முதன்முறையாக எரியத்தொடங்கியது.
அந்த அரங்கம், ஒருவகையினில் முக்காலத்தைக் குறிப்பதாய் இருந்தது. கடந்த காலத்தின் ஒளிக்கோபுரங்கள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், டாக்டர் தர்மாம்பாள் அம்மையாரும் தங்களின் உடல்கள் சோர்ந்திருந்தபோதும், போராட்டத்தின் பல்லாண்டுத் தழலைச் சுமந்தபடி வந்திருந்தனர். அவர்களது அருகே நிகழ்காலம் நின்றது: மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியவாணி முத்து, செயலாளர்களாகப் பொறுப்பேற்ற வெற்றிச்செல்வி அன்பழகன் மற்றும் புவனேஸ்வரி நடராசன், மேலும் தன் கருத்துகளைத் தன்மையான விளக்கு போல் ஏந்திவந்த ராணி அண்ணாதுரை. இவர்களின் மத்தியிலே, எதிர்காலத்தின் முதல் தீப்பொறி நின்றது, மாணவி சற்குணம். ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று ‘நம் நாடு’ இதழே தீர்க்கதரிசனமாகக் குறிப்பிட்ட அந்தக் குரல், அன்றைய கூட்டத்தையே போருக்கு அழைத்துச்செல்ல தயாராக இருந்தது.
அன்று பேசிய பெண்கள், வெறும் பாராட்டுரை வழங்கவில்லை; அவர்கள் வரலாற்றின் தாளில் தங்களுக்கென ஒரு புதிய அத்தியாயம் செதுக்கிக்கொண்டிருந்தனர். தோழியர்கள் சத்தியவாணி முத்து, வெற்றிச்செல்வி அன்பழகன், புவனேஸ்வரி நடராஜன், பங்கையர்ச்செல்வி, ஜகஜ்ஜோதி நாகராஜன், ஜி.பி. அமுதா, அருண்மொழி வில்வம், வே.கோவிந்தசாமி, கமலா பாலசுந்தரம், துரையம்மாள் சிவப்பிரகாசம்.
“மகளிர் மன்றம் ‘லேடீஸ் கிளப்’ போன்றது அல்ல. லேடீஸ் கிளப் என்றால் பெரிய வீட்டுப்பெண்கள் உல்லாசத்திற்கு மாலை வேளைகளில் அங்கு கூடிக் கலைந்துவிடுவார்கள். அந்த லேடீஸ் கிளப்பிற்கு வேடிக்கை, விளையாட்டு, உல்லாசத்தைத் தவிர வேறொன்றும் நோக்கமில்லை. நாம் ஆரம்பித்திருக்கும் மகளிர் மன்றம் அப்படிப்பட்ட உல்லாசத்திற்காக அல்ல. நாமும் நமது குடும்பத்தாரும் உல்லாசத்திற்காக நமது நாடும் நன்றாக வாழ்வதற்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மகளிர் மன்றம் பாடுபடும்.
– ராணி அண்ணாதுரை அம்மையாரின் இந்தக் கருத்து தீக்கங்கு போல் சுட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

இராணி அண்ணாதுரை- பின் சொன்ன கருத்து ஆழமான சமூக – மனோதத்துவப் பார்வை கொண்டது. இன்றைக்கும் நம் சமூகத்தில் காணக்கூடியது:
“பழைய வழக்கங்களை மாற்றி, சீர்திருத்தங்களைச் செய்ய தாய்மார்கள் மட்டும் பயப்படுவார்கள் என்று சொல்லமுடியாது; பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். ஆனால், வெளியில் யாராவது கேட்டால் ‘வீட்டில் பெண்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்று பெண்கள் மேல் பழி போட்டுவிடுவார்கள். அவ்வாறு நம்மீது பழி போடாதவாறு பெண்களாகிய நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
அதனைத் தொடர்ந்து எழுந்த மாணவி சற்குணத்தின் குரல் கூர்மையானது:
“அரசியல் உங்கள் தன்மானத்தைப் பறிப்பதாயின், அதை எதிர்த்துப் போராடுங்கள்; அதற்காகச் சிறை செல்லவும் தூக்குமேடை ஏறவும் சித்தமாய் இருக்க வேண்டும். அதுபோலவே மதம், கலாச்சாரம் முதலியன உங்கள் தன்மானத்தைப் பறிப்பதாயின், அதைத் தகர்த்தெறியுங்கள். உங்கள் தன்மானத்தைப் பரிசுசிக்கும் சின்னங்களை அழித்தொழியுங்கள். அப்படிப்பட்ட ஏடுகளைத் தீயிலிடுங்கள். இந்த மண்ணில் மகளிர் மறுமலர்ச்சிக்காக ஓயாமல் போராடும் ஒரு பேரியக்கத்தைக் கட்டுவதே நம் முதல் பணி. பெண்களாகிய நாம், இந்தக் கணத்திலிருந்தே தேர்தல் பரப்புரையைத் தொடங்க வேண்டும். ‘தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை’ என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.”
அந்தச் சொற்கள் கேட்போரின் உடலை மட்டுமல்ல மனத்தையும் உசுப்பியிருக்கும். இன்றும் நவம்பர் 6, 1956 அன்று வெளியான ‘நம் நாடு” இதழை நம் தமிழ்நாட்டரசின் தமிழ் மின் நூலகத்தின் வழி படிக்கும்போது, அந்த வெம்மையை நம்மால் உணரமுடியும்.
இறுதியில், பேரறிஞர் அண்ணா அந்த மன்றத்தின் இலட்சியத்தை எளிமையாக இவ்வாறு கூறினார் “அறிவைப் பயன்படுத்துபவர்களாக – உரிமை உணர்ச்சி கொண்டவர்களாக – நாட்டை மீட்கும் விடுதலை வேட்கை கொண்டவர்களாக நமது தாய்மார்களை ஆக்குவதற்காகத்தான், இந்த மகளிர் மன்றம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.”
அன்றைய தினம் கடந்த காலத்தின் தீ. நிகழ்காலத்தின் வழியே பாய்ந்து, எதிர்காலத்தைத் தீப்பற்றி எரியவைத்தது.
ஆனால், அந்தத் தொடரோட்டம் வெறும் சொற்பொழிவுகளில் முடிந்துபோகவில்லை; அது செயலிலே பாய்ந்தது.
1957 தேர்தலில், குளித்தலை தொகுதியில் முதன்முறையாக வேட்பாளராக நின்ற தலைவர் கலைஞருக்காக, இடைவிடாது உழைத்தவர், பொற்செல்வி அம்மையார். அவரது உழைப்பை நினைவுகூர்ந்து கலைஞரே சொன்னார் “என் வெற்றிக்குக் காரணமானவர்கள் பொற்செல்வி அம்மையாரும், அவரது இணையர் திரு இளமுருகுவும் தான்.”
பின்னர், மகளிர் அணி விரிவடைந்தபோது, அதன் முதல் தலைவரானார் பொற்செல்வி அம்மையார். 1987ல் அவர் பெற்ற கலைஞர் விருது, அவரது போராட்டங்களுக்குக் கிடைத்த மகுடமாயிருந்தது.

1957ஆம் ஆண்டு தேர்தலில் சத்தியவாணி முத்து, கழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் ஒருவராய் இருந்தார். 1967ஆம் ஆண்டு கழகம் அறிஞர் அண்ணாவின் தலைமையில் முதன்முறையாய் ஆட்சிப் பீடம் ஏறியபோது, அரிஜன (ஒடுக்கப்பட்டோர்) நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, அதைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் 1974 வரை அரிஜன (ஒடுக்கப்பட்டோர்) நலத்துறை அமைச்சராக இருந்தார்.
1956ல் எரிந்த அதே தீப்பொறி, சற்குணத்தின் கரங்களிலும் சுடராக வளர்ந்தது. மாணவர் பேச்சாளராக இருந்து, கழகப் பணியாளராகி, 1971ல் சென்னை மாநகராட்சி உறுப்பினராக, பின்னர் மகளிர் அணிக் தலைவராகவும், இறுதியில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகவும் உயர்ந்தார் எஸ்.பி.சற்குணபாண்டியன். 1988ல் தேசிய முன்னணி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், இளைஞரணியினர் அணிவகுத்து நிற்க, இவர் தலைமையில் சுமார் 2000 பெண்கள் பேரணியாக அணிவகுத்து வந்தது வரலாற்றுச் சிறப்புமிக்கது.
இதைப் பாராட்டிய தலைவர் கலைஞர் அவர்கள். மேடையிலேயே அவருக்குத் தங்கச்சங்கிலி பரிசளித்தார். 1989 மற்றும் 1996 என இருமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1996-2001 காலகட்டத்தில், தலைவர் கலைஞரின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1990ல் அவருக்கும் கலைஞர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் அவர்கள், திராவிட இயக்கத்தின் வெம்மை மிக்க அரசியலாலும் தமிழ் விடுதலை உணர்வாலும் செதுக்கப்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார். 1980ல் கழகத்தில் இணைந்த அவர், 1989 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று, தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமியை வென்று, 2004 முதல் 2009 வரை ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
2016 ஆம் ஆண்டு, தி.மு.க.வின் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியனுக்குப் பின்னர், மூத்த நிர்வாகி என்ற முறையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.
ஆக, 1956ல் ஒரு பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி, ஒரு இனிதான தொடக்க விழா மட்டும் இல்லை. அது அந்த மாபெரும் தொடரோட்டத்தின் இரண்டாம் அத்தியாயம்.
காட்சி 3: நெருப்பாற்றில் நீந்திய பெருங்கவிதை
இந்தப் பயணம் என்றுமே சலனமில்லாத நீரில் நிகழும் சாதாரண நீச்சலாய் நிகழ்வதில்லை. நூற்றாண்டுகளாக, சாதியும் ஆணாதிக்கமும் நெருப்புச் சங்கிலிகளை வார்த்து, பெண்களைச் சுட்டெரிக்கும் தழல் நதிகளில் மூழ்கடித்து வந்திருக்கின்றன. அந்தத் தழல் நதியில், முதல் சுடரேந்தி களமிறங்கினார், ஒரு வீராங்கனை. தன்னை மூழ்கடிக்க முயன்ற தீச்சுவாலைகளை மீறி, அவர் நீந்தினார். அவளது கால்கள் குளுமையான ஆற்றுச் சேற்றை தொட்டிருக்கவில்லை; ஒவ்வொரு பேரலையும் அவளது ஆன்மாவை ஓயாத வெப்பத்தால் சுட்டெரித்தது. அது, அவளது சகிப்புத்தன்மையை மட்டுமல்ல, அவளது கொள்கையின் திண்மையையும் சோதித்தது. நீந்தினாள் அவள் நீந்தினாள்! கையில் ஏந்தியது மங்கிய விளக்கையல்ல, அடக்குமுறையின் ஆவியைக் கிழித்தெறியும் திராவிட இயக்கத்தின் தழல்மிகு தீப்பந்தத்தை!
ராஜாஜியின் அகங்காரத்தைப் பேரணிகளாலும் சிறை நிரப்புதலாலும் தகர்த்தெறிந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், தர்மாம்பாள் அம்மையாரிடம் இருந்து, சத்தியவாணி முத்துவின் எஃகு போன்ற கொள்கை உறுதியுடனான செயல் வரலாற்றில் இருந்து, மாணவி சற்குணத்தின் ‘தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை’ எனும் தீர்க்கதரிசன முழக்கத்திடம் இருந்து அந்தத் தீப்பந்தம் அணையாமல் ஏந்தப்பட்டது. இப்போது, அந்த அற்றுப்போகாத ஓட்டத்தில், கனிமொழி கருணாநிதி தழலுக்குள் பாய்கிறார். அவர் கலைஞரின் மகள், ஆம் – ஆனால், அந்த வாரிசு அடையாளத்தையும் மீறி, தன்னுடைய அனுபவங்கள் வழி செதுக்கப்பட்ட ஒரு சக்தியாக அவர் உருவெடுத்தார்.

இதைக் கலைஞரே உறுதிசெய்தார். ஒரு நேர்காணலில்: அவர் கனிமொழியிடம் கண்டது வெறும் உறவை அல்ல; திராவிடர் கழகத்தின் கனல்மிகு கனலில் புடம் போடப்பட்ட, சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு உண்மையான கழக உடன்பிறப்பை.
தன் கொள்கை முன்னோர்களின் பாதையைப் போலவே, அவரது பாதையும் அமைதியான நீரோடையாக இருக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை குற்றச்சாட்டுகள் ஒரு கொடும் சுழல் போல தாக்கின. அதன் ‘மூளையாகச் செயல்பட்டவர்’ என்று பழிக்கப்பட்டு, தில்லி திகார் சிறையின் தனிமையில் 190 நாட்கள், ஏழாண்டுக்கால நிழல்களில் அவர் இழுத்தடிக்கப்பட்டார். உண்மையின் ஊற்றுக்கண் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்ளும் ஊடகங்களின் வித்தைகள் பலவற்றை அனைவரும் கண் முன் கண்டோம், அக்கொடும் காலத்தில். டிசம்பர் 21, 2017 அன்று, குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை, அநீதியானவை’ என்று சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளிக்க, விடுதலை கிடைத்தது. இப்படியாக ஒரு நெருப்பாற்றை நீந்திவந்தார்.
தி.மு.க. மகளிர் அணிச் செயலாளராக (2015-2022), அவர் கட்டியது வெறும் கேளிக்கை மன்றத்தை அல்ல, ஒரு போர்ப்படையை: மாவட்ட அளவிலான பயிற்சிப் பட்டறைகள், வாக்குச்சாவடி உத்திகள், கொள்கைப் பயிலரங்குகள்மூலம், பார்வையாளர்களைப் போராட்டக் களத்தின் சிற்பிகளாக மாற்றினார். 2017ல், மகளிர் இடஒதுக்கீடு என்பது தர்மம் அல்ல, நூற்றாண்டுக்கால இருட்டடிப்புக்கான பரிகாரம் என்று டெல்லியில் அவர் நடத்திய பேரணிகள், 1938ஆம் ஆண்டு தீர்மானங்களின் இடிமுழக்கத்தை நினைவுபடுத்தின.
நாடாளுமன்றத்தில், அவரது குரல் அதே சித்தாந்தத் தெளிவுடன் ஒலித்தது. 2019ல், முன்னேறிய சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு குறித்த மாநிலங்களவை விவாதத்தில், அதை “சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும் செயல்” என்று பிரகடனம் செய்தார். “இது முன்னேற்றம் அல்ல; நாம் போராடி எழுப்பிய சமத்துவத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் ஒரு கண்கட்டி வித்தை” என்று எச்சரித்தார். மீண்டும் 2023ல், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பெரும் ஆரவாரத்துடன் கொண்டுவரப்பட்டபோது, அதன் முகத்திரையைக் கிழித்தார். “பெண்களை மதிப்பதாகவும், அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் நடிப்பது, பெண்களை ஏமாற்றும் ஒரு சூழ்ச்சி மட்டுமே’என்ற பெரியாரின் வரிகளை மேற்கோள் காட்டி, அவர் உண்மையை உரைத்தார்: இது உடனடி விடியல் அல்ல; முற்போக்கான தென் மாநிலங்களைத் தண்டிக்கும் தொகுதி மறுவரையறையுடன் பிணைக்கப்பட்ட ஒரு சதி என்று முழங்கினார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பற்றி பேசும்போது, “இது இடஒதுக்கீடு பற்றியது அல்ல; இது, பாகுபாட்டையும் அநீதியையும் அகற்றும் செயல். எங்களுக்கு வணக்கம் செலுத்துவதை நிறுத்துங்கள், எங்களைச் சமமாக நடத்துங்கள். எங்களுக்குப் பீடங்கள் தேவையில்லை” என்று தந்தை பெரியாரையும் மாணவி சற்குணத்தையும் தன் கனல் பறக்கும் கருத்துவீச்சின்வழி, ஒருசேர நம் கண்முன் கொண்டுவந்தார்.
இந்த வார்த்தைகள் வெற்றிடத்தில் கரையவில்லை; அவை அக்டோபர் 14, 2023 அன்று சென்னையில் எதிரொலித்தன. தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி கருணாநிதியின் சிந்தனையில் உருவான கலைஞர் நூற்றாண்டு மகளிர் உரிமை மாநாட்டில், 10,000-க்கும் மேற்பட்ட குரல்கள் எழுந்தன – அது, புதிய யுகத்தின் பெத்தநாயக்கன்பேட்டையாக அமைந்தது.
மேடையிலிருந்து அவர் அறைகூவல் விடுத்தார்: “அரசியல் என்பது பெண்களின் கருத்துகளால், அக்கறைகளால், இலட்சியங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்; வரையறுக்கப்பட வேண்டும்; முடிவு செய்யப்பட வேண்டும். எங்கள் குரலுக்குச் செவிமடுக்காமல் எந்த அரசியலும் இருக்கக் கூடாது; எந்தக் கொள்கையும் வகுக்கப்படக் கூடாது; எந்த ஆட்சியும் நடைபெறக் கூடாது. ஒன்றிணைவோம், வாருங்கள்! சரித்திரத்தைத் திருத்தி எழுதுவோம்! நீதியை நிலைநாட்டுவோம்! அந்த நீதி, இந்நாட்டுப் பெண்களுக்கு மட்டுமானதல்ல; அது இங்கு வாழும் ஒவ்வொரு உயிருக்குமான நீதி, ஒவ்வொரு மனிதருக்குமான நீதி.” இந்த கருத்துக் கணைகளுக்குப் பதிலளித்தது, திராவிட இயக்கப் பெண்கள் மட்டுமல்ல.
சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், மாநில சுயாட்சி பற்றிப் பேசும்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1974ல் ஒன்றிய – மாநில உறவினை ஆய்வுசெய்ய அமைத்த ராஜமன்னார் குழுவை நினைவுகர்ந்தார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே கூட்டாட்சி முறையானது உளுத்துப்போவதைக் குறித்து எச்சரித்தார், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, அடக்குமுறை அமைப்புகளைத் தகர்க்கக் கோரினார். கட்சி எல்லைகளைக் கடந்து, அநீதிக்கு எதிரான ஒருமித்த குரல் எழுத்தது. 1956ல் ஏற்றப்பட்ட தீப்பந்தம், புதிய தலைமுறையினரின் உள்ளங்களைத் தீப்பற்ற வைக்கிறது என்பதற்கு அதுவே சாட்சி.
இந்தப் பெருங்காவியப் பயணத்தின் உச்சியில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகவும் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் கனிமொழி நிற்கிறார். 2023ல் அவர் முன்னின்று நடத்திய கலைஞர் நூற்றாண்டு மகளிர் உரிமை மாநாடு, ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்த, இந்த மண் இதுவரை காணாத வரலாற்று நிகழ்வு. மேலும், கழகத்தின் 75ஆம் ஆண்டில் சமூக நீதிக்கான அவரது சீரிய, சமரசமில்லா செயல்களைப் போற்றி, 2025ஆம் ஆண்டு தி.முக முப்பெரும் விழாவில், ‘தந்தை பெரியார் விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.
தழலேந்திய வேங்கைகளின் பாய்ச்சல்
மகளிருக்கு அதிகாரத்தில் உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை வெறும் பேச்சளவில் அல்லாமல், கட்சி விதிகளிலேயே கழகம் இணைத்தது. அதன்படி, கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் மற்றும் தலைமைக் கழகம் வரை, அனைத்து நிலைகளிலும் துணைச் செயலாளர் பொறுப்புகளில் பெண்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிரணியில் மட்டுமல்லாமல், தி.மு.க.வின் ஒவ்வொரு சார்பு அணியிலும் பெண்களின் பங்களிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வாசுகி முருகேசன் தொடங்கி, கீதா ஜீவன், அங்கயற்கண்ணி போன்றோர் மாவட்டச் செயலாளர்களாகவும், பலர் செய்தித் தொடர்பாளர்களாகவும் திறம்படப் பணியாற்றிவருகின்றனர். தற்பொழுது, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.ன்.சோமு அவர்கள், தி.மு.க மாநிலங்களவைக் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இத்தகைய கழகச் செயல்பாடுகளின் வழி பெண்களை அதிகாரத்திற்குக் கொண்டுவந்ததற்குச் சிறந்த சான்றாக, இளம் வயதிலேயே அமைச்சரான ஆ.தமிழரசி ரவிக்குமார் திகழ்கிறார். 2001ல் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2006ல் சட்டமன்ற உறுப்பினராகி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
மற்றொரு சிறந்த சான்று, 2006ஆம் ஆண்டு, இந்தியாவின் இளம் மேயர் என்னும் பெருமையினைப் பெற்ற அன்றைய சேலம் மாநகராட்சி மேயர், ரேகா பிரியதர்ஷினி மற்றும் தற்போதைய சென்னை மாநகராட்சி மேயர், பிரியா ராஜன். இன்று பிரியா ராஜனைச் சேர்த்து, தமிழ்நாடு முழுவதும் 11 பெண் மேயர்களை நியமித்து வரலாற்று முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழகம்.
கொள்கைக் களத்தில், ‘என் உயிரினும் மேலான’ எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப்போட்டிகள் நடத்தி, அடுத்த தலைமுறை கொள்கைப் பேச்சாளர்களை உருவாக்கும் கழக இளைஞர் அணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னெடுப்பில், ஆண்களை விட பெண் பங்கேற்பாளர்களே அதிகமாக இருந்தது, கட்சியில் பெண்கள் பெற்றுவரும் எழுச்சிக்குச் சான்றாகும். இன்று தேர்ந்தெடுக்கப்பட்டபடி பெண் கொள்கைப் பேச்சாளர்கள், தங்கள் நெருப்புப் பொறி பறக்கும், கருத்துகளைக் கழக மேடைகளைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பேசிவருகின்றனர். இன்று, கழகத்தில் பெண்கள் கழக மகளிர் அணி மகளிர் தொண்டரணி தாண்டி, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மாணவர் அணி, மருத்துவர் அணி, அயலக அணி, சுற்றச்சூழல் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி எனப் பல களங்களில் – தலைமைப் பதவிகள் தொடங்கி, கடைநிலை வாக்குச்சாவடி கமிட்டி வரை தங்கள் முத்திரையினைப் பதித்து வருகின்றனர்.

ஆம், அவள் நீந்துகிறாள் அந்த நெருப்பாற்றில், தழல் ஏந்திய கரங்கள் தளராமல் நீந்துகின்றன; தீப்பந்தம் விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கிறது ராமாமிர்தத்தைப் போல, சத்தியவாணியைப் போல, மாணவி சற்குணத்தைப் போல, அவள் பறைசாற்றுவது -திராவிட இயக்கத்தில் பெண்கள் பின்தொடரும் நிழல்கள் அல்ல; அலங்காரப் பதுமைகள் அல்ல. மாறாக அவர்கள் நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் வீராங்கனைகள்; தழலேந்தி வழிகாட்டும் தலைவியர்; தங்களின் சரித்திரத்தைத் தாங்களே செதுக்கும் பேராளுமைகள்.



