செந்தலை ந.கவுதமன்

மொழி ஆற்றல் உறவை உருவாக்கவும் உறவை முறிக்கவும் மொழியால் முடியும். அடுத்தவர் நம்மை அழைக்கும் சொற்கள், நமக்குள் ஏற்படுத்தும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் கொண்டு இந்த உண்மையை உணரலாம்.

‘வா,வாடா, வாங்க’ என்பன ஒரேமொழிச் சொற்கள், ஒரே பொருளைத் தரும் சொற்கள். இருந்தாலும், அவை உருவாக்கும் உணர்ச்சி வேறுவேறு!
”வா’ என்றால் திகைக்கிறோம்.
”வாடா’ என்றால் முறைக்கிறோம்.
‘வாங்க’ என்றால் மகிழ்கிறோம்.
உணர்வோடும் வாழ்வோடும் தொடர்பு உடையது மொழி.
தாய்மொழி தமிழை மத வளர்ச்சிக்குப் பயன்படுத்திய வரலாறு இருக்கிறது; சாதி வளர்ச்சிக்குப் பயன்படுத்திய வரலாறும் இருக்கிறது. அரசியல் உணர்ச்சிக்குப் பயன்படுத்திய அண்மை வரலாறும் இருக்கிறது.
புது வழிகாட்டிய தி.மு.க.
சமூக விடுதலைக்கும் பகுத்தறிவு விழிப்புணர்ச்சிக்கும் தமிழைப் பயன்படுத்திய வரலாற்றைத் திராவிட இயக்கம்தான் தொடங்கிவைத்தது.
அந்தத் தனித்தன்மையான செயல்பாட்டால் திராவிட இயக்கம் எல்லாத் தமிழரையும் எளிதாகச் சென்றடைந்தது. தகுதியான இடத்தைத் தமிழ் பெறக்கூடிய சூழலையும் அதனால் உருவாக்கியது.
‘தமிழைத் தாழ்த்துவதன்மூலம் தமிழரைத் தாழ்த்த முடியும்’ என்பதைத் தமிழின எதிரிகள் தெரிந்துவைத்திருந்தார்கள். அதில் அவர்கள் வெற்றிபெற்றும் வந்தார்கள்.
சரிந்துவரும் தமிழினத்தைத் தலைநிமிரச்செய்ய வேண்டுமென்றால், தமிழைத் தலைநிமிரச்செய்ய வேண்டும் எனப் புரிந்துகொண்டு வழிகாட்டியது திராவிட முன்னேற்றக் கழகம்.
கல்வியிலும் வாழ்விலும் திணிக்கப்பட்ட அயன்மொழி வல்லாண்மையை அடையாளம் காட்டிய தி.மு.க. அவற்றை அகற்றும் போராட்டங்களைத் தொடங்கியது: தொடர்ந்து போராடியது; வெற்றியும் பெற்றது: போராட்டத்தைத் தொடர்ந்தபடியும் உள்ளது.
துறைதோறும் தனக்கான இடத்தைத் தமிழ் பெறுவதற்கான போராட்டத்தைத் தி.மு.க. தொடர்ந்து நடத்திவருகிறது.
வழிகாட்டி வழியமைத்தோர்
அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் முதலியோர் முழுநேர அசியல்வாதிகளாக இருந்தபோதிலும், கலை இலக்கியங்களுக்குத் தங்கள் செயற்பாட்டில் முக்கிய இடமளித்துவந்தார்கள். இதில், அவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.
மக்களைத் தி.மு.கழகக் கொள்கைகள் எளிதாகச் சென்றடைவதற்கான கருவிகளைக் கண்டறிந்தார்கள். கலை, இலக்கியம், நாடகம், திரைப்படம், சொற்பொழிவு, சிறுகதை, புதினம், இதழ்கள் முதலியவற்றைக் கருவியாகப் பயன்படுத்தி, கழக வளர்ச்சியில் வெற்றி கண்டார்கள் திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகள்.
கழக வளர்ச்சியைத் தடுப்பதற்காக, முன்னோடியரின் எழுத்திற்குத் தடைபோட்டு சிறைத்தண்டனை, தண்டத்தொகை என அச்சுறுத்திப் பார்த்தது அன்றைய ஆளுங்கட்சி.
‘எழுத்துரிமைப் போர்’ எனும் புதுவடிவத்தைக் கையிலெடுத்து இதழ்களுக்கும் நூல்களுக்கும் எதிரான அன்றைய ஆட்சியாளரின் ஒடுக்குமுறையை எதிர்கொண்டது, தி.மு. கழகம். 1949ல் உருவான கழகம் 1950ல் முதன்முதலாக நடத்திய போராட்டமே ‘எழுத்துரிமைப் போராட்டம்’ என்பதைத்தான்.
தமிழரைத் தாழ்த்தும் தமிழ்அழிப்பு முயற்சிகளை முறியடித்தபடி முன்னேறியது கழகம். கட்சி வேறுபாடு கடந்து, கழகச் செயல்பாடுகளில் இணைந்து நின்றனர் தமிழர்கள். அதனால், எழுச்சியும் விழிப்பும் பெறத் தொடங்கியது தமிழினம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுபத்தைந்து ஆண்டுக்கால வரலாற்றை அறிந்தால், இந்த உண்மைகளையும் அறியலாம்.
வேர்களை மறக்காத அண்ணா
தி.மு.கழகம் 06.03.1967ல் ஆட்சிக்கட்டிலில் முதன்முறையாக அமர்ந்தபோது, அறிஞர் அண்ணா அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். ‘பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்கும் சாதனையைத் தி.மு. கழகம் செய்துகாட்டியது எப்படி?”
அறிஞர் அண்ணா பொறுமையாகச் சொன்னார், “இது பதினெட்டு ஆண்டு சாதனை அல்ல, ஐம்பதாண்டுக்கால உழைப்பால் பெற்ற சாதனை.”
நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்க வரலாற்றோடு தி.மு.கழக வரலாற்றையும் இணைத்துப்பார்த்து, அறிஞர் அண்ணா அப்படிக் கூறினார்.
நீதிக்கட்சி பிறந்தது 1916ல்! நீதிக்கட்சி நடத்திய மாநாடுகள் அனைத்தும் ‘பார்ப்பனரல்லாதார் மாநாடு’ எனும் பெயரிலேயே நடந்துள்ளன. அதற்குக் காரணம் இருக்கிறது.
மதவாதிகள், தீவிரவாதிகள் எனக் காங்கிரசில் பிரிந்து நின்ற இரு குழுவினரும் 1916ல் ஒன்றிணைந்துவிட்டனர். அவர்களுக்கு வழிகாட்ட அன்னிபெசன்ட் அம்மையார் முன்வந்தார்; சுயாட்சி இயக்கமும் அவரது ‘நியூஇந்தியா’ இதழும் அவரின் ஆதரவாளர்களான தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் வழிகாட்ட முன்வந்தனர்.
காங்கிரசு கட்சி, இவர்கள் ஆதரவில் நடத்தும் சுயாட்சிக் கிளர்ச்சி வெற்றிபெற்றால், பார்ப்பனர் ஆட்சிதான் ஏற்படும் என்பது தெளிவாய்த் தெரிந்துவிட்டது.
அதனால், விழிப்படைந்த சர்.பிட்டி தியாகராயரும் டாக்டர் டி.எம்.நாயரும், டாக்டர் சி.நடேசனாரும் ‘பார்ப்பனரல்லாதார் அறிக்கையை 20.12.1916ல் வெளியிட்டனர். காங்கிரசு கட்சியின் சுயாட்சிக் கிளர்ச்சியை முறியடிக்கப் பார்ப்பனரல்லாதார் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் எனக் கோரியது அந்த அறிக்கை. அதுவே, நீதிக்கட்சியின் தொடக்கம் ஆனது.
1916ல் தொடங்கிய நீதிக்கட்சியும் 1925ல் பிறந்த சுயமரியாதை இயக்கமும் 1938ல் ஒன்றிணைந்தன. 27.08.1944ல் திராவிடர் கழகம் என அதன் பெயர் மாற்றப்பட்டபோது, நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவர் தந்தை பெரியார்; பொதுச்செயலாளராக இருந்தவர். அறிஞர் அண்ணா. திராவிடர் கழகத்திலிருந்து 17.9.1949ல் உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த வரலாற்றை நினைவுபடுத்தவே, “இது ஐம்பதாண்டுக்கால உழைப்பின் சாதனை” என 1967ல் பதவியேற்றபோது அண்ணா கூறினார்.
பதவியேற்பதற்கு முன்னதாக, திருச்சிராப்பள்ளி சென்று (பதினேழாண்டு காலப் பிரிவை மறந்து) தந்தை பெரியாரை அறிஞர் அண்ணாவும், கழக முன்னணியினரும் 02.03.1967ஆம் நாள் சந்தித்த நிகழ்ச்சி, நன்றியுணர்வைக் காட்டும் வரலாற்று நிகழ்ச்சி!
பெரியாரின் பண்பாட்டுப் போர்
பெரியாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும், தமிழ்ச் சமூகத்திலும் தமிழ்நாட்டு அரசியலிலும் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கியவை. அதன் ஒரு பகுதி வெற்றியே, ஆட்சிக்கட்டிலில் தி.மு.க.வை அமர்த்தியது எனத் தி.மு.கழகத் தலைவர்கள் உணர்ந்திருந்தனர். அதற்கான அடையாளமாகப் பெரியாரிடம் வாழ்த்துப் பெற்று, 06.03.1967ஆம் நாள் பதவியேற்றனர்.
வைதீகக் கருத்தியலானது மனவழியாகத் தமிழரை அடிமைப்படுத்துவதையும் அடிமை நிலையைத் தாங்களாகவே ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தமிழரை வைத்திருப்பதையும் சரியாக உணர்ந்திருந்தவர், பெரியார். அவரால் மட்டுமே தமிழினத்திற்குச் சரியான வழியைக் காட்ட முடிந்தது.
பழைமையை வெறுத்த பெரியார், சனாதனப் பழைமையையும் தமிழ்ப் பழைமையையும் ஒப்பிட்டுக் காட்டினார். தமிழ்ப் பழைமையில் சமத்துவக் கூறுகள் மேலோங்கி நிற்பதை எடுத்துக் காட்டினார்.
மனிதரை மனிதர் இழிவாக நடத்தும் சாதியமைப்பின் இழிவும், ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்கும் வடமொழி மந்திரத் திருமணச்சடங்கு வழிமுறைகளும் பழந்தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரானவை என வேறுபடுத்திக் காட்டினார்.
கழகத்தின் சமத்துவக் குரல்
பண்பாட்டுப் போராட்டமே உயர்ந்த போராட்ட முறை எனும் புதிய வழியில் தமிழர்களை நடைபோடவைத்தது, பெரியாரின் தனித்தன்மை.
பண்பாட்டின் முதன்மையான கூறு மொழி. தமிழின் வாயிலாகச் சமத்துவத்தை மீட்டெடுக்கும் பாதையைத் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்ந்தெடுத்துக்கொண்டது. அந்தப் பாதையில் ஊக்கத்துடன் நடைபோடத் தொடங்கியது.
பல நூற்றாண்டுத் தமிழ் மரபைப் புதிய உலகத்தோடு பொருத்திக்காட்டி வளப்படுத்தும் நோக்கோடு திராவிட முன்னேற்றக் கழகம் 17.09.1949 ஆம் நாள் முதல், புயல் வேகத்தோடு செயல்படத் தொடங்கியது.
தி.மு.கழகம், தன் கொள்கைச் சாரமாகச் சமத்துவத்தை முன்வைத்தது. இந்தக் கொள்கையைத் தமிழின் தொன்மையிலிருந்து பற்றிக்கொண்டது கழகம்.
தமிழ் நிலத்தைத் தமிழர்களே ஆள வேண்டும் எனும் எழுச்சியின் அடையாளமாகவும் இளையோரின் வீரியத் திரட்சியாகவும் தி.மு.கழகம் பார்க்கப்பட்டது.
கழகம் தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணா அவர்களுக்கே வயது நாற்பதுதான்! இருந்தாலும் அவர் அப்போதே எல்லோராலும் ‘அண்ணா’வாகப் பார்க்கப்பட்டார். அடுத்தகட்டத் தலைவர்கள் அனைவரும் அவரைவிட இளையவர்கள்.
நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு 29 வயது. இனமானப் பேராசிரியர் க.அன்பழகனுக்கு 27 வயது. கலைஞர் அவர்களுக்கு 25 வயது. ஈ.வெ.கி. சம்பத்துக்கு 23 வயது.
அனைவரும் இளையோர் என்றாலும் ஒவ்வொரு துறையில் கூர்மையுடையோராய் அவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.

வளமான தமிழில் எழுதியும் பேசியும் கலைவடிவங்களைக் கையாண்டும் மக்களை அணுகும் வல்லமையுடையோராகக் கழக முன்னோடிகள் அனைவரும் விளங்கினார்கள்.
தெளிவும் தீர்வும்
ஆட்சிக்கு வெளியே மதம் இருக்கட்டும் என்னும் தெளிவோடு தொடங்கப்பட்ட கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் தெளிவு காட்டிய தி.மு.கழகம் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தது.
பண்பாட்டு மாற்றத்தை உருவாக்கும் பல முனைக் கருவிகளைத் தி.மு.கழகம் ஏந்தி நின்றது. அதனை ஏளனப்படுத்திய எதிரிகள், மக்களிடம் அவை பெறும் வரவேற்பைக் கண்டு திகைக்கத் தொடங்கினர்.
வழிபாட்டுத் துறையில் எதிர்மறை உணர்ச்சிக்கு இடம் தராமல், ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்னும் திருமந்திர வாசகம் முன்வைக்கப்பட்டபோது, எளிய மக்கள் நெருங்கி வந்தனர்.
தமிழர்கள் இந்துக்கள் அல்லர். இயற்கை நெறியை வழிபாடாகக் கொண்ட வாழ்வே தமிழர் வாழ்வு’ எனச் சங்க இலக்கியங்களைச் சான்று காட்டித் தி.மு.க. பேசியபோது, இணக்க உணர்ச்சியை எல்லாத் தரப்பினரிடமும் பார்க்க முடிந்தது.
சமத்துவ வரிசையும் தமிழர் வாழ்வும்
சாதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வைப் போக்க, ‘இடஒதுக்கீடு’ என்னும் சமூக நீதிக் கொள்கை முன்வைக்கப்பட்டது.
சாதிகளுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்கி, தமிழின உணர்வு ஓங்கச் செய்ய, சாதி மறுப்புத் திருமணமுறை வலியுறுத்தப்பட்டது.
ஒரு சாதித் திருமணங்களைத் தங்கள் குடும்பங்களில் தவிர்த்துத் தமிழர் எனும் உணர்வில் உறவு கலக்க வழிகாட்டினர், கழக முன்னோடிகள்.
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபின் பணப்பரிசு, பதக்கம், பணிவாய்ப்பு எனச் சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தியது. சாதிஉணர்வு குறைந்த இடத்தில் தமிழர் என்னும் இனவுணர்வு மேலோங்கும் என்ற கருத்தைச் சுடர்விட வைத்தது கழகம்.
தேசிய இனங்களுக்கு இடையே சமத்துவத்தை நிலைநாட்ட, ‘கூட்டாட்சி முறை என்றும் அரசியல் கோட்பாடு கழகத்தால் முன்வைக்கப்பட்டது.
கழகம் தந்த புதுமை
‘மொழிகளுக்கு இடையே சமத்துவம் உருவாகாமல், மொழிபேசும் இனங்களுக்கு இடையே சமத்துவம் உருவாகாது’ – என உரத்து முழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம்! இந்தியும், வடமொழியும் திணிக்கப்படுவதை எதிர்க்கவேண்டியதன் தேவையைப் புரிந்துகொண்டவர்கள், உள்ளத்தில் தமிழுணர்வுத் தீ அனல் பரப்பத் தொடங்கியது.
திருமணங்களில் வடமொழி மந்திரத்தையும் புரோகித இழிவையும் துடைத்தெறிவதற்காகத் தமிழை முன்நிறுத்தும் சுயமரியாதைத் திருமணமுறை நடைமுறைக்கு வந்தது. தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட ஏற்பு வழங்கியதோடு, அதனை முன்தேதியிட்டு சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் இன்றுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத தன்மானத் திருமணச்சட்டம் தமிழ்நாட்டில் மட்டும் இருப்பது, தி.மு.கழகத்தால் கிடைத்த பெருமை.
பெயருக்குப்பின் சாதி இழிவைச் சுமக்காத தன்மான வாழ்வையும் தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும். இதுவும் இந்தியத் துணைக் கண்டம் எங்கும் இல்லாத புதுமை.
ஆதிக்கவாதிகளைச் சொற்களாலேயே அலறவிடும் புரட்சியையும் தமிழ்நாடு மட்டும்தான் இன்றுவரை சாதித்துவருகிறது.

சொல்லுக்குள் வரலாறு
தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’மத்திய அரசு’ என மற்றவர்களைப்போல் கூறாமல், ‘ஒன்றிய அரசு’ எனச் சரியாகக் கூறியதைக் கேட்டு ஆதிக்கவாதிகள் அலறி ஓய்ந்தனர்.
‘தமிழ்நாடு’ என்னும் பெயர் கசப்பதாகவும் ‘தமிழகம்’ என்பதுதான் இனிப்பதாகவும் பேசிய சிலரும் சோர்ந்து சாய்ந்தனர்.
‘சனாதன ஒழிப்பு’ கழகத்தின் கொள்கை எனத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியதற்கு அலறியவர்களும் நீதிமன்றம், வழக்கு என அச்சுறுத்தியவர்களும் பின்பு துவண்டுபோனார்கள்.
“தாழ்ந்தவர்கள் அல்ல, தாழ்த்தப்பட்டவர்கள்’ என்றும் ‘பிற்பட்டவர்கள் அல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்றும் சொல்லுக்குள்ளேயே வரலாற்றைச் சுருக்கித் தரும் வியப்பைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வழங்கிவருகிறது.
குடிசை மாற்று வாரியம் இப்போது, ‘நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என மாறிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் இப்போது, ‘சமூக நீதி மாணவர் விடுதி’களாகியுள்ளன.
கழகச் செயற்பரப்பு
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள், வள்ளலார், பாவேந்தர் பாரதிதாசன் எனப் புதிய பண்பாட்டுப் போர்க்கருவிகளாக இலக்கியங்களை மக்களிடம் எடுத்துச்சென்றது தி.மு.கழகம். அவற்றைப் பரப்புவோரை ஊக்குவித்ததால் உயர்ந்து வளர்ந்தது கழகத்தின் செயற்பரப்பு.
தமிழ்ச் சுவடுகளைத் தமிழ்நாட்டில் பதித்த கழகத்தின் சாதனைகள் ஏராளம். அவற்றைச் சுருக்கமாக இப்படித் தொகுக்கலாம்.
- எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையாகத் தமிழ் வாழ்த்தை 1971ல் அறிமுகப்படுத்தியது.
- ‘இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்பதை ஐம்பெரு முழக்கங்களில் ஒன்றாக்கி, மொழிப்போரைத் தொடர்ந்து நடத்துவது.
- வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களாகவும் மதச்சார்பற்ற பெயர்களாகவும் மாற்றியமைத்து வழிகாட்டியது, பின்பற்ற வலியுறுத்திவருவது.
- ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ எனும் முழக்கத்தை 23.01.1968ல் முழங்கிய முதல்வர் அறிஞர் அண்ணா, இருமொழிச் சட்டத்தை நிறைவேற்றித் தமிழ்ப் பாதுகாப்புக்கு வழியமைத்தது.
- தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது
- சென்னை, மயிலாடுதுறை, உதகமண்டலம் முதலிய ஊர்ப் பெயர்களில் தமிழை மீட்டமைத்தது.
- நலத்திட்டங்களுக்கு முன்னோடியர் பெயர் சூட்டியது.
- பல்கலைக்கழகங்களுக்கு அறிவாளர்களின் பெயர்களை வைத்தது.
- பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவர், பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களில் ஆய்வு இருக்கை அமைத்தது.
- அறிஞர்கள், சான்றோர்கள், கொள்கை முன்னோடிகள் பெயரில் மணிமண்டபங்கள், சிலைகள் நிறுவிவருவது.
- அறிஞர்கள், படைப்பாளர்கள் நூல்கள் நாட்டுடைமையாக்கியது.
- சென்னையின் துணை நகருக்கு ‘மறைமலை நகர்’ எனவும், சைதாப்பேட்டை பாலத்திற்கு ‘மறைமலையடிகள் பாலம்’ எனவும் பெயர் சூட்டியது.
- பல துறை அறிஞர்களையும் நினைவூட்டும் தொடர் பணிகளை நிறைவேற்றிவருவது.
- உலகத் தமிழர்களுக்காகத் தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைத்தது.
- தமிழ் நூல்கள் அனைத்தையும் மின்னூல்களாக்கிப் பாதுகாத்துப் பரவச்செய்வது.
- கணினித் தமிழை வளப்படுத்தியதாலும் பள்ளிப் பாடம் ஆக்கியதாலும் எழுத்துரு அமைத்தல், கணினிக்கொள்கை வகுத்தல் முதலிய முயற்சிகளாலும் இந்திய மொழிகளுக்கெல்லாம் வழிகாட்டியது.
- வள்ளுவருக்குக் குமரியில் சிலை, வள்ளுவர் கோட்டம், பேருந்தில் திருக்குறள் என மாற்றுப் பண்பாட்டை நிறுவிக் காட்டும் அரும்பணிகளைத் தொடர்வது.
- பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாட ஊக்குவிப்பது.
- பொங்கல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாள் எனக் கலைஞர் வழங்கிய ஆணை விலக்கப்பட்ட சூழலை விலக்கும் முயற்சியைத் தொடர்வது.
- பெரியார் பிறந்தநாளைச் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடுவது
- வள்ளலார் பிறந்தநாளைக் ‘கருணை நாள்’ எனக் கொண்டாடச் செய்வது.
- காமராசர் பிறந்தநாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ எனக் கொண்டாடுவது.
- முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளைச் ‘செம்மொழி நாள்’ எனக் கொண்டாட அறிவித்தது.
- ஐந்தாம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி – கலைஞர் எனும் அறிவிப்பு நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட நிலையை மாற்றும் முயற்சியைத் தொடர்வது.
- பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என ஆணை வழங்கிய செயல் முடக்கப்பட்டதை நீக்கும் முயற்சியைத் தொடர்வது.
- தடைகள் தொடர்ந்தபோதும் தமிழ் வழிபாட்டிற்குத் தொடர் முயற்சி எடுத்துவருவது.
- தொல்காப்பியப் பூங்கா அடையாற்றில் நிறுவியிருப்பது.
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2010ல் கோவையில் நடத்திக்காட்டியது.
- செம்மொழித் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத்தந்தது.
- செம்மொழி மைய நிறுவனம் சென்னையில் நிறுவியது.
உயிரூட்டிய கழகம்
தி.மு.கழகம் 1949ல் தொடங்கப்பட்டதும் முதன்முதலில் நடத்தப்பட்ட போராட்டம், எழுத்துரிமைப் போராட்டம். 1950ல் கழகம் நடத்திய இந்தப் புதிய போராட்டமே, ‘ஆரியமாயை’ எழுதியதற்காக அறிஞர் அண்ணாவும் ‘பொன்மொழிகள்’ எழுதியதற்காகத் தந்தை பெரியாரும். தண்டிக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டதிலிருந்து விடுதலை பெற வைத்தது.
பொதுக்கூட்டம் நடத்திப் பேசுவதற்கும் தடைபோட்டு, வெள்ளையர் பாணியில் நடைமுறைப்படுத்தியது அன்றைய ஆளுங்கட்சி. அதனையும் ‘பேச்சுரிமைப் போர்’ என எதிர்கொண்டது தி.மு.கழகம். முதன்முதல் திருச்சிராப்பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுரிமைப் போர், பரவலாகக் கவனிக்கப்படாத செய்தியாகவே இன்றும் உள்ளது.
பெரம்பலூர் நாரணமங்கலத்தில், 1956ல் தி.மு. கழகம் நடத்தும் கூட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனை மீறிப் பேசி, கழக வரலாற்றில் புதிய போராட்ட வரலாற்றைத் தொடங்கிவைத்தவர், திருச்சி து. வானமாமலை. அறிஞர் அண்ணா அவர்களின் நண்பரான சாம்புவின் நெருங்கிய நண்பரான அவர், திருமணம் செய்து கொள்ளாதவர். நாரணமங்கலத்தில் தடையை மீறிப் பேசி, மூன்று மாத சிறைத்தண்டனையை அவர் பெற்றார்.

தடை தகர்த்த வரலாறு
எழுத்தாலும் பேச்சாலும் மக்களை எளிதாக நெருங்கவும் மேம்படுத்தவும் தமிழைப் பயன்படுத்தியது தி.மு.கழகம். தமிழுக்கு நேர்ந்த தடைகளைத் தகர்த்து முன்னேறிய முன்னேற்றக் கழகத்தின் வீரம் மிக்க வரலாற்றுப் பக்கங்கள் வியப்பானவை; மிகவும் விரிவானவை.
- தமிழைத் துறைதோறும் உயிர்த்துடிப்போடு காப்பது.
- இழந்த உரிமைகளை மீட்டு, மீண்டும் அதிகார இருக்கையில் தமிழை அமர்த்துவது.
- தமிழைப் படைக்கலனாகப் பயன்படுத்தி, கழகத்தை வலிமைப்படுத்துவது -இப்படிப் பலமுனைச் செயற்களங்களோடு தமிழை ஏந்திய தனிச்சிறப்பான வரலாற்றைப் பெற்றிருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்
விழிப்புணர்ச்சி ஊட்டும் எழுத்திற்காகவும் இதழ்களுக்காகவும் கலைப்படைப்புகளுக்காகவும் தண்டிக்கப்பட்ட கழகத் தலைவர்களின் ஈக வரலாற்றை இளையோருக்கு நினைவூட்ட வேண்டும்.
அதிகாரத்தின் கொடிய நிழலில் மறைக்கப்பட்டிருந்த தமிழின் பண்பாட்டுக் கூறுகளின்மீது வெளிச்சம் பாய்ச்சி, தமிழையும் தமிழரையும் நிமிரவைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தனித்தன்மையான சாதனை வரலாற்றைத் தமிழுலகம் என்றும் நினைவுகூரும்.
தமிழரின் கலை, இலக்கியம், இசை, கல்வி, மருத்துவம், வரலாறு எனப் பல துறைகளுக்கும் தி.மு.கழகம் உயிரூட்டியதால், தமிழினம் உயிர்பெற்றது.
விழிப்பு விதைகளைத் தூவியபடி எழுபத்தைந்து ஆண்டுகள்ளத் கடந்துள்ள தி.மு.கழகத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் இருக்கிறது. எதிர்காலத் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தமிழின முன்னேற்றமும்!
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய ஊடங்களும் திராவிட முன்னேற்றக்கழகமும்!


