ந.விநோத்குமார்
மக்கள், மக்களால், மக்களுக்காக ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதுதான் ஜனநாயகம். நம்மை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுப்பதிலிருந்தே பொதுமக்களும் அரசு நிர்வாகத்தில் பங்கு பெறத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அரசு நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்கு உறுதிசெய்யப்படுகிறதா என்றால், பெரும்பாலும் இல்லை என்பதே பதில்!
அரசு என்பது முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் உள்ள அமைப்பு மட்டுமே அல்ல. அவர்கள் அனைவரும் யாருக்காக ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்களோ அந்தக் கடைக்கோடி பயனாளியையும் உள்ளடக்கி இருப்பதுதான் அரசு.

சமூக நீதியிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தும் தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ‘அந்தக் கடைக்கோடி பயனாளியையும்’ அரவணைத்துச் செல்லும்படி அரசு இயந்திரம் இயங்கும்.
மாநிலத்தின் முன்னேற்றப் பாதையில் அந்தப் பயனாளியால் செலுத்த முடிகிற பங்களிப்பையும் அங்கீகரித்துச் செல்வதுதான் தி.மு.க.வின் ஆட்சிக் கோட்பாடாக 1967 முதல் இருந்துவருகிறது. மக்களின் அந்த ‘பங்கேற்பு ஜனநாயகத்தை’ அரசு அமைப்புக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் தி.மு.க. எப்படி உறுதிசெய்கிறது என்பதைப் பார்ப்போம்.
செயல்வீரர்களின் சீரணி…
‘செயல்…அதுவே சிறந்த சொல்’ என்பார்கள். அதை பேரறிஞர் அண்ணாவும் அறிந்திருந்தார். அதனால்தான், 1967 மார்ச் 6 ஆம் தேதி முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்ததும், அடுத்து வந்த மே 8 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் இப்படிச் சொன்னார்:
“நாம் சிந்தித்து, சிந்தித்து ஒரு நிலைக்கு வந்துவிட்டோம். இனி நாம் சிந்தித்துப் பயன் இல்லை. அதில் பொருத்தமும் இல்லை. மன்றத்தின் பெயர், ‘சிந்தனையாளர் மன்றம்’ என்று இருக்கட்டும். உங்கள் நடவடிக்கைகள் செயலாளர்கள் மன்றமாக அமைய வேண்டும்.”
அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசும்போது, “நாம் எதை, எதை நிறைவேற்றக் கருதுகிறோமோ அதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிதி இல்லை. ஆட்சியின் மூலமாகச் செய்யும் காரியங்கள் அல்லாமல் உங்களைப் போன்றவர்களைக் கொண்டு என்ன என்ன பணிகளைச் செய்ய முடியும் என்று யோசித்துவருகிறேன். இதில் எனக்குத் திட்டமான வடிவம் புலப்படவில்லை. உங்களைப் போன்றவர்களை, மாணவ மாணவிகளைப் பொதுப்பணியில் ஈடுபட விரும்புகிறவர்களை எப்படிப் பயன்படுத்துவது, எதிலே ஈடுபடுத்துவது என்று யோசித்து வருகிறேன்” என்றவர், கிராமத்தில் இருப்பவர்களுக்கும் நகரத்தில் இருப்பவர்களுக்கும் எப்படிப்பட்ட வேலைகளைத் தரலாம் என்றும் அவர் திட்டமிட்டார்.
“இது, சென்னை நகரமாக இல்லாமல் கிராமமாக இருந்தால், உங்களை எல்லாம் உணவு உற்பத்தியில் ஈடுபடும்படிச் சொல்வேன். உங்களை, நகரில் உள்ளவர்களை அப்படிப்பட்ட பணிகளுக்கு நான் போகச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட இடங்களுக்குப் போய்வரவே ஒருநாள் ஆகிவிடும். வாரத்தில் ஒரு நாள் அல்லது தினமும் ஒரு மணி நேரம் உங்கள் நேரத்தை நீங்கள் செலவிட்டால், அது கோடிக்கணக்கான ரூபாய்க்குச் சமமாகும்.
கிராமமாக இருந்தால், இலங்கையில் அன்று இருந்தது போல பெரிய பெரிய அரசாங்க விவசாயப் பண்ணைகளில், ஊதியம் வாங்காத தொண்டாக, பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச்சென்று நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தலாம் என்றும், நகரமாக இருந்தால், அரசு நடத்திவந்த கோழிப் பண்ணைகளில் சேவையாற்ற வைத்து, அங்கு ஏற்படும் நட்டத்தைக் குறைக்கலாம் என்றும் அண்ணா யோசித்தார்.
உணவு உற்பத்தி, குடும்பக் கட்டுப்பாடு, கலப்பட ஆபத்து, சுத்தமாக வாழும் முறை, இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இளைஞர்களை ஈடுபடுத்த அவர் திட்டமிட்டார். அன்று அண்ணாவின் அந்த உரைக்குப் பிறகு சிந்தனையாளர்கள், செயல் வீரர்களானார்கள். இப்படித்தான் 1967 ஆகஸ்ட் 16 அன்று ‘சீரணி’ உதயமானது..!
பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வழிநடத்தப்பட்ட சீரணி இயக்கம், 1967 முதல் 1974 வரை பள்ளிகள் கட்டுவது, சாலை அமைப்பது, பாலங்கள் போடுவது, ஏரிகள் உருவாக்குவது, குளங்களைத் தூர்வாருவது என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு சாதனைகள் பலவற்றைப் படைத்தது. அதில் ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர், வசதி படைத்தவர், வசதி இல்லாதவர், படித்தவர், படிக்காதவர் என்ற பேதங்கள் ஏதுமின்றி நூற்றுக்கணக்கானோர் தங்கள் உழைப்பைச் செலுத்தி பொதுச்சொத்துக்களை உருவாக்கவும் பராமரிக்கவும் செய்தார்கள்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டில் உருவான ‘நெருக்கடி நிலை’யையொட்டி, அரசு சாரா ‘சீரணி’ அமைப்பை, ‘அரசியல் சார்புள்ளவர்களால் நடத்தப்படுகிறது’ என்று பழிசுமத்தி, அன்றைய ஆளுநர் கே.கே.ஷா அவர்களால் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
இப்படி ஒரு ‘பங்கேற்பு ஜனநாயக அமைப்பை’ அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் வேறு எந்த இயக்கமும் கட்சியும் இந்தியாவில் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
இளைஞர் அணியின் இனிய உதயம்!
கட்சியின் சார்பில் இளைஞர் அணி உருவாகுவதற்கு முன்பே பொது அமைப்பாக இளைஞர் அணியை ஏற்படுத்தினார், முத்தமிழறி கலைஞர்.

1957 தேர்தல்… அப்போது முத்தமிழறிஞருக்கு குளித்தலை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவர் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தியாது, கிராமம் ஒன்றில் ‘மகாத்மா காந்தி இன்னும் உயிரோடிருக்கிறார்’ என்று நம்பிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து, அவர்களின் அறியாமையை நினைத்து வருந்தினார்.
‘அறியாமைதான் துயரத்தின் தாய்’ என்பார்கள். அந்தத் துயரத்தை முற்றிலும் நீக்கும் பணியில்தான் முத்தமிழறிஞர் கலைஞர் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுவந்தார். திட்டங்கள் பல தீட்டினார். அவற்றில் ஒன்றுதான், ‘இளைஞர் அணி’.
சீரணியை உருவாக்கி, தமிழ் மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 1971ல் இந்தத் திட்டத்தை திருச்சியில் தொடங்கிவைத்தார் கலைஞர். இதுகுறித்து 1971 நவம்பர் 16 தேதியிட்ட ‘தமிழரசு’ இதழில் ‘இலட்சியப் பணி புரியும் இளைஞர் அணி என்று தலைப்பிட்ட செய்திக் கட்டுரை இவ்வாறு தெரிவிக்கிறது:
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே, அதைப் போல ஒரே நேரத்தில் இரண்டு விதமான நன்மைகளை இந்தத் திட்டம் உருவாக்கியிருக்கிறது. கிராம மக்களிடம் அறிவொளிப் பிரச்சாரமும் நடைபெறுகிறது; வேலையின்றித் திரியும் பட்டதாரிகளில் சிலருக்கு ஓரளவு வேலையும் கிடைக்கிறது. அவர்களின் வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தில் மாதம் ரூ.175 ஊதியமாகவும் கிடைக்கிறது. இந்த அணியில் தொண்டாற்றுவோருக்கு அரசுப் பணியில் சேர சிறப்புச் சலுகைகள் காட்டப்படுகின்றன.
இளைஞர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறவர்களுக்கு சத்திய விசய நகரம் (வட ஆர்க்காடு), கிருஷ்ணகிரி (தர்மபுரி), பவானிசாகர் (கோவை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), தே.கல்லுப்பட்டி (மதுரை) முதலிய ஐந்து இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சமூகப் பொருளாதாரம், கிராமச்சூழ்நிலை இவைதான் இந்தப் பயிற்சியின் முதற்பாகம். பயிற்சிக் காலம் 28 நாட்கள். முதல் பத்து நாட்கள் வகுப்பறைப் பயிற்சி நடைபெறுகிறது. கிராம வளர்ச்சிலைப் பற்றிய பல்வேறு கருத்துகள் இங்கே கற்றுத்தரப்படுகின்றன. 11ஆம் நாளிலிருந்து 20ஆம் நாள் முடிய பத்து நாட்கள், ‘கிராமத்தில் இடம்பெறுதல்’ என்ற பயிற்சி நடைபெறுகிறது. கிராமத்தில் உள்ள மக்களுக்குப் புதுவித வேளாண்மை முறைகளைக் கையாளச் சொல்லி சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பயிற்சி இது. அதன் பிறகு, 21 ஆம் நாளிலிருந்து 28ஆம் நாள் முடிய வகுப்பறை பயிற்சி நடைபெறுகிறது `என்று தெரிவிக்கும் அந்தக் கட்டுரை, சத்திய விசய நகரத்தில் இளைஞர் அணியினர் என்னென்ன பணிகளை மேற்கொண்டனர் என்பதைப் பட்டியலிடுகிறது.
57 பேர் கலந்துகொண்ட அந்தப் பயிற்சியில் கிராமத்துக்கு 11 பேர் வீதம் தாமரைப்பாக்கம்,ஆனைமநல்லூர், காவனூர், மாம்பாக்கம், வேலூர் ஆகிய கிராமங்களில் சமூகப் பயிற்சியில் ஈடுபட்டனர். கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு ஊசி போடுவது, விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்த கற்றுத்தருவது, வீடுகளில் கழிவறை கட்டுவதன் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்வது, காவனூர் என்ற பகுதியில் கழிவுப்பொருட்களை உரமாக்கும் ‘வார்தா’ முறை கழிவறையை ஏற்படுத்துவது, கூட்டுறவு வங்கிகளைப் பயன்படுத்த கற்றுத் தருவது போன்ற பணிகளை இளைஞர் அணியினர் மேற்கொண்டனர். பெரும்பாலும் இந்தப் பணிகளை எல்லாம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கிராம நிர்வாகத்துடன் இணைந்தே மேற்கொண்டனர் இளைஞர் அணியினர்.
மண்ணின் மைந்தர்களே மன்னர்கள்!
1989 ஜனவரி 27ல், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் மூன்றாவது முறையாக தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. ஆட்சியில் அமர்ந்து இரண்டு மாதங்கள் நிறைவடையும் முன்பே, பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நமது கழகம் நிறைவேற்றியிருந்தது. அதில் ஒன்று… முந்தைய ஆட்சியில் ஊராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்ப வழங்கியதும், ஊராட்சி உறுப்பினர்களுக்கான பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்ததும் அடங்கும்.
அதற்கு முன்பு வரை, அவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதாக இருந்தது. பிறகு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் ஊராட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலத்தை மூன்றாண்டுகளாகக் குறைத்ததோடு,ஊராட்சிப் பொறுப்புகளுக்கான தேர்தல்களையும் நடத்தாமல் இருந்தது.

தொடர்ந்து வந்த ஏப்ரல் மாதத்தில், நிதிநிலை அறிக்கையின்போது, அரசு அறிவித்துள்ள திட்டப் பணிகளின் பயனை மக்கள் அடைய அவர்கள் என்ன செய்ய வேண்டும், அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும், எந்தக் கால அளவுக்குள் செய்ய வேண்டும் என்பதை அறிவிப்புப் பலகைகள் வாயிலாகவும், மக்களுடன் தொடர்புகொள்ளும் கூட்டங்களிலும், அச்சடிக்கப்பட்ட குறிப்புகள் மூலமும் தெரிவிக்க உள்ளோம். இது திட்டப் பணிகளின் பயன்களைத் தகுதியுள்ளோர் பெறவும், ஒரு சிலர் தகாத முறையில் பெறுவதைத் தடுக்கவும் அனைவரும் அறியத்தக்க வகையில் அமையும்,’ என்று அறிவித்தார் கலைஞர்.
இந்த அறிவிப்புக்குப் பிறகே தமிழ்நாட்டில் பள்ளிகள் முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும்அவற்றின் வாயில்களில் அங்கு நடைபெறும் பணிகள், எதற்கு யாரை அணுக வேண்டும், திட்ட மதிப்பீடுகள் போன்றவை எழுதப்பட்டன. சுவற்றில், தகவல் பலகையில் எழுதிவைப்பதோடு நில்லாமல், மாவட்டம்தோறும் பல்துறை பணி விளக்க முகாம்களையும் நடத்தியது கழக அரசு.”
இது மக்களிடையே கழக அரசின் ஒளிவுமறைவற்ற தன்மையை எடுத்துக்காட்டியதோடு அல்லாமல், பொதுமக்களாகிய தாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன ஆவணங்களை எல்லாம் கையில் வைத்திருக்க வேண்டும், யாரைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்ற உரிமையைப் பெற்றுத்தந்தது. பொறுப்புணர்வைப் புரியவைத்தது.
இந்த இடத்தில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா. பூரணலிங்கம் 1989 அக்டோபர் மாத ‘தமிழரசு’ இதழில் எழுதிய கட்டுரை ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவர், அப்போது தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி ஆணையாளராக இருந்தார். ‘கைப்பம்பு விசைப்பம்பு பராமரிப்பு முறை’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், ஊராட்சி அளவிலான கைப்பம்பு, விசைப்பம்பு ஆகியவற்றைப் பராமரிப்பதில் தமிழ்நாடு என்ன மாதிரியான வழிமுறையைப் பின்பற்றுகிறது, அதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதை அவர் விளக்கியிருக்கிறார்.
“1987 வரை கைப்பம்புகள் பராமரிப்பு முறை, ‘பழுது நீக்கி செயல்படுத்தும் முறை நிலையாக அமைந்திருந்தது. அதாவது, ஒரு கைப்பம்பு பழுது அடைந்தால், அதை ஆய்வுசெய்து பழுது நீக்கம் செய்யப்படும். 1989 முதல் ‘பழுது தடுக்கும் முறை’ அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த முறையில், வழிப்படம் ஒன்று நிறுவப்பட்டு, பொருத்துநர் ஆய்வு செய்யும் நாள் மற்றும் எந்தெந்த நாட்களில் கைப்பம்புகளை ஆய்வு செய்தார், துப்புரவு செய்த விவரம் மற்றும் உதிரிபாகங்கள் மாற்றப்பட்ட விவரங்கள் அந்த வழிப்படத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் கைப்பம்புகளின் பழுது நிலைகள் குறைக்கப்பட்டு, அவை இயங்கும் கால அளவும் நீட்டிக்கப்படுகிறது.”
இந்தப் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, குறிப்பிட்ட இடத்தில் உள்ள கைப்பம்பினால் பயன்பெறும் மக்களிடையே இருந்து, பெண் ஒருவர் பராமரிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அவ்வாறு ஓர் ஊராட்சி முழுவதும் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு இரண்டு நாள் சிறு சிறு பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான கருவிகளும் வழங்கப்பட்டன.
இதன்மூலம், எந்த ஊரிலும் எந்த நேரத்திலும் கைப்பம்புகள் சரிவர இயங்குவதை நமது கழக அரசு உறுதிசெய்தது.
தவிர, ஓர் ஊராட்சியின் வளர்ச்சிக்கு அந்த ஊராட்சியைச் சேர்ந்தவர்களே தலைவர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பொறுப்புகளுக்கு வந்தால்தான் முன்னேற்றத்தைக் காண முடியும் என்பதில் தி.மு.க. பெரும் நம்பிக்கை. கொண்டிருந்தது.
இப்படியான காரணங்களால்தான் ‘மாநில சுயாட்சி கோருகிற எங்களால்தான் உள்ளாட்சிகளுக்குச் சுயாட்சி தரமுடியும்,’ என்று தெரிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
உள்ளணைத்துச் செல்லும் ஆட்சி!
‘தம்பி… மக்களிடம் செல்…’ என்று பேரறிஞர் காட்டிய பாதையில், ‘நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்’ என்று முத்தமிழறிஞர் தந்துசென்ற முன்னுதாரங்களின் அடுத்த கட்டமாக, அனைவரையும் உள்ளடக்கிச் செல்லும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், ‘நான் முதல்வன்’, ‘நம்ம ஊரு பள்ளி’, பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பொதுமக்கள் என பல முக்கியமான திட்டங்களில் மக்கள் பங்களிக்கும் உரிமையை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். அதை உரிமை என்றுகூட சொல்ல முடியாது… பொறுப்பு!
இதற்கு முன்பு வரை இருந்த அரசுகள், மாணவர்களின் கல்வியை மையப்படுத்தி மட்டுமே சிந்தித்தன. ஆனால், இன்றைய ‘திராவிட மாடல் அரசு, கல்வியுடன் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர உழைத்துவருகிறது. முன்பெல்லாம் கல்லூரிகளுடன் மட்டும்தான் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வளாக நேர்காணல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவற்றை அளித்துவந்தன. அதிலும் அந்த வசதிகள் எல்லாம் சிலதனியார் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியவையாக இருந்தன. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கிடைத்துவருகின்றன. அதன் காரணமாக ஐஐடி, உட்பட பல உயர்தர தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் கதவுகள் நமது மாணவர்களுக்காகத் திறந்திருக்கின்றன.
ஓர் அரசின் கடமை என்பது பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை போன்ற பொதுச் சொத்துகளை ஏற்படுத்தித் தருவதுடன் முடிந்துவிடுவதில்லை. அவற்றைச் சரியான முறையில் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் அந்தச் சொத்துகளினால் பயனடையும் பயனாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அந்த அடிப்படையில்தான் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டுவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்கும் விதத்தில் அந்தக் குழுக்கள் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. போலவே, கோயில்களை நிர்வகிக்கும் குழுக்களிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆங்கிலத்தில் ‘கலெக்டிவ் குட்’ என்று சொல்லப்படும் அனைவருக்கும் பயனளிக்கும் நலத்திட்டங்களில் மக்களின் பங்களிப்பையும் உறுதிசெய்கிற ஆட்சித் திறமையால்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி, அனைவருக்குமான ஆட்சியாக இருக்கிறது!
‘பங்கேற்பு ஜனநாயகம்’, ‘அதிகாரப் பரவலாக்கம்’ என்பதெல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் பெரிய வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், அடிமட்டத்தில் செய்யப்படும் சிறிய நிர்வாக மாற்றங்கள்தான் அவை என்பதைப் புரிந்துகொண்டால், சாமானியர்களை நிர்வாக ரீதியாக தி.மு.க. எவ்வாறு வலுப்படுத்தியது என்பது புரியும்.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!



