கலைஞருக்கு பின்பாக திமுகவை வழிநடத்தப்போவது ஸ்டாலின் தான் என, கலைஞருக்கு முன்பாகவே சொன்னவர் பேராசிரியர் தானென்றும், தனது அரசியல் வாழ்க்கை தொடக்கமானதே அவரிடமிருந்து தான் எனவும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவருக்கு புகழாரம் சூட்டினார்.

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவின் பொதுக்கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, துரைமுருகன், தொல்.திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பேரா.ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு சிறப்பிதழை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ. ஈஸ்வரன், எதிர்த்து அரசியல் செய்தவர்கள் கூட, எதிர்த்து விமர்சனம் செய்ய முடியாத அளவிற்கு அனைவர் மீதும் அன்பு காடியவர் பேராசிரியர். அனைவராலும் பாராட்டக்கூடிய அளவிற்கு தூய்மையாக அரசியலில் வாழ்ந்தவர் பேராசிரியரென குறிப்பிட்டார்.
தொல்.திருமாவளவன் பேசும்போது, பேராசிரியருக்கு மணிவிழா நடத்தியபோது மாணவனாக கலந்துகொண்டது நினைவூட்டுகிறேன். வயதால், பண்பால் முதிர்ச்சியடைந்தவர் அவர். இந்திய அரசியலில் கலைஞர்-பேராசியரின் நட்பைப்போல நான் வேறு யாரையும் பார்த்ததில்லை.
குடும்ப வாரிசு என பலரும் சொல்கிறார்கள். இளம்வயதில் பட்ட கஷ்டத்தை பேசவில்லை. சிரமத்தை சொல்லவில்லை. அடுத்த தலைவரை இனம் காட்டியவர் பேராசிரியர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை விமர்சிக்கின்றனர். பத்தோடு பதினொன்றாக அவர் பதவியில் உள்ளார். அவ்வளவுதான், என்றார்.
இன்றைக்கு நாம் பேசிவரும் சனாதானவாதிகள் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்பே இதே பெரியார் திடலில் பேசியவர் பேராசிரியர் என முத்தரசன் பேசினார்.
திமுக சந்தித்த இடர்பாடுகள் அனைத்திலும் அரணாக இருந்தவர் பேராசிரியர். எந்த விஷயமாக இருந்தாலும், பேராசிரியரை கல்ந்தாலோசிக்காமல் கலைஞர் முடிவெடுத்ததில்லை என கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, மு.க.ஸ்டாலினை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது பேராசிரியர் கொடுத்த ஊக்கம் தான். 43 ஆண்டுகள் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பது என்பது சாதாரணமானது அல்ல. கலைஞருடனான பேராசிரியரின் நட்பு எவராலும் பிரிக்க முடியாதது.
திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை கைகாட்டியவர் பேராசிரியர், அவர் எதிர்பார்த்ததை விட முதல்வர் சிறப்பாக உதாரணமாக திகழ்ந்து கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தற்போது காஷ்மீரை முடித்துவிட்டார்கள். அடுத்து பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி ஜனதிபதிக்கும் அனுப்பி வைத்து விடுவார்கள்.
நமது கொள்கைகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ், சனாதன சக்திகள் சூழ்ந்துள்ளன. இதற்கு தெற்கே இருந்து தான் முடிவு எழுதப்படும் என்று சொன்ன ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருந்து வடக்கில் இருந்து வரும் ஆதிக்க சக்திகளை தெற்கே நுழைய விடமாட்டோம், என பேசினார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, நம்மை விட கட்சி பெரிது என கருதுகிறவன் தான் கட்சியில் நிலைப்பான் என பேராசிரியர் கூறுவார். சிலருக்கு நம்மை பிடிப்பதில்லை காரணம், அவர்களின் கொள்கைக்கு எல்லை உண்டு. ஆனால் நமக்கு(திமுக) தமிழினத்திற்கு, மொழிக்கு, சமயத்திற்கு என பல கொள்கைகளை வைத்திருக்கிறோம். கலைஞர் இறப்பதற்கு முன்பாக பேராசிரியர் இறந்திருந்தால், கலைஞர் எந்தளவிற்கு பேராசிரியருக்கு புகழ் சேர்த்திருப்பாரோ, அதில் கொஞ்சமும் குறைவில்லாமல் செய்பவர் நம் முதல்வர், என பாராட்டிப் பேசினார்.
ஆசிரியர் கி.வீரமணி பேசும்போது, வேருக்கு விழா எடுத்த தலைவருக்கு நன்றி. திமுகவை வழிநடத்த தளபதியை சுட்டிக்காட்டிய பேராசிரியரின் கணக்கு எந்நாளும் தவறியதில்லை. இது பதவிக்கூட்டணி அல்ல, கொள்கைக்கூட்டணி, என குறிப்பிட்டார்.
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அவரை உரிமையோடு நான் அழைப்பது பெரியப்பா. அவரை பெரியப்பாவாக நினைத்தேன், போற்றினேன். நடந்து கொண்டேன், இன்றும் அப்படித்தான்.
பேராசிரியரின் நூற்றாண்டு விழாவில் 100 பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளோம். டி.பி.ஐ வளாகத்தில் இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் பேராசிரியரின் சிலை வைக்கப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக நாளை பேராசிரியர் நூற்றாண்டு வளைவை திறந்துவைக்க உள்ளோம்.
கலைஞருக்கு பின்பாக திமுகவை வழிநடத்தப்போவது நான் தான் என என்னை, கலைஞருக்கு முன்பாகவே சொன்னவர் என் பெரியப்பா பேராசிரியர். என் அரசியல் வாழ்க்கை தொடக்கமானதே அவரிடமிருந்து தான்.
இளைஞர் திமுகவை நான் தொடங்கியபோது, கோபாலபுரத்தில் அலுவலகத்தை முதலில் திறந்து வைத்ததே என் பெரியப்பா தான்.
கலைஞரின் செயல்பாடு என்னிடம் இருப்பதாக 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே என்னை பாராட்டியவர் பேராசிரியர்.
வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தபோது, கல்வெட்டு போல எனக்கு சான்றிதழ் வழங்கியவர் என் பெரியப்பா தான். கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் வாரிசு ஸ்டாலின் தான் என பேராசிரியர் பேசினார்.
பேராசிரியருக்கு இணை பேராசிரியர் தான். திராவிட மாடலை கலைஞரிடமும், பேராசிரியரிடமும் தான் நான் பெற்றுக்கொண்டேன், என பெருமையோடு குறிப்பிட்டார்.