நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ,நிறுவனர் – தலைவர்,தொல்.திருமாவளவன், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

- அமெரிக்காவில் நமது மக்களவைக்கு இணையான பிரதிநிதிகளின் அவை ( House of Representatives) உறுப்பினர்களின் எண்ணிக்கை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக 435 என மாறாமல் அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அங்கு எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடவில்லை. எனவே இந்தியாவிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே தொடரச் செய்யலாம். எண்ணிக்கையை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்று மற்ற மாநிலங்கள் அழுத்தம் கொடுத்தால் அனைத்து மாநிலங்களிலும் இப்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் சராசரியாக 20% தொகுதிகளை உயர்த்தலாம். அவ்வாறு செய்தால் தற்போதுள்ள சமநிலை குலையாமல் பாதுகாக்க முடியும்.
மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் உயர்த்திக் கொள்ளலாம் என முடிவு செய்யலாம். அவ்வாறு மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்போது அதற்கேற்ப மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல் மக்களவைத் தொகுதிகளுக்கு கடைபிடித்த 20% உயர்வு என்கிற முறையையே மாநிலங்களவை தொகுதி எண்ணிக்கைக்கும் கடைபிடிக்கவேண்டும்.
- நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் மறு சீரமைப்பு அரசியல் நிர்ணய சபையில் விவாதித்து முடிவு செய்யப்பட்டபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டம் இல்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் வேர்க்கால் மட்டத்தில் மக்களின் ஜனநாயகத் தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றன. எனவே சட்டமன்றம் நாடாளுமன்றம் ஆகியவற்றின் முதன்மையான பணியான புதிய சட்டங்களை இயற்றுதல், சட்டங்களையும் திட்டங்களையும் வகுத்தல் ,ஆராய்தல் என்பவற்றுக்கு இனிமேலாவது முன்னுரிமை அளிக்கலாம். அவ்வாறு செய்தால் தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைப் பற்றிப் பெரிதாக கவலைப்படத் தேவை இருக்காது.
தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் போது அதை மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் ஒரு மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடலாம். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 2031 இல் எவ்வளவு மக்களவை இடங்கள் இருக்கும் எனக் கணக்கிட்டுப் பார்த்து 811 இடங்கள் வரும் என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 18 வயது தாண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால் 2031இல் 764 இடங்கள் வரும் என்று அவர்கள் கூறுகின்றனர் ( Parliamentary Delimitation: A Study on India’s Demographic Struggle for Political Representation – Pankaj kumar Patel, T.V.Sekher, IIPS, Mumbai) தொகுதி எண்ணிக்கை மற்றும் எல்லை என்பதை முடிவு செய்யும் போது வாக்காளர்களை அடிப்படையாக வைத்து கணக்கிடுவதே சரியாக இருக்கும். எனவே அடுத்த தொகுதி மறு சீரமைப்பில் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும்.
- கடந்தமுறை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட போது இஸ்லாமியர்களின் வாக்குகள் மதிப்பிழக்கும் வண்ணம் தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டன என்ற புகார்கள் எழுந்தன. பட்டியல் சமூக மக்களிடமிருந்தும் அத்தகைய புகார்கள் எழுந்தன. எனவே எதிர்வரும் தொகுதி மறுசீரமைப்பின் போது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அந்த எல்லைகளை வரையறுப்பதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். பட்டியல் சமூக மக்களின் வாக்குகளுக்கும் இது பொருந்தும்.
- தொகுதி மறுசீரமைப்பு குறித்த விவாதத்தில் இணைத்துப் பரிசீலிக்க வேண்டிய இரண்டு பிரச்சனைகள் உள்ளன: ஒன்று, மாநிலங்களவை பிரதிநிதித்துவம்; மற்றொன்று, நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு முறை.
பாசிச எண்ணம் கொண்டவர்களால் ஒன்றிய ஆட்சி கைப்பற்றப்படும் போது மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தாம் கொண்டுவரும் மக்கள் விரோத சட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்குப் பல்வேறு தந்திரங்களைக் கையாளுகிறார்கள். அது மட்டுமின்றி பண மசோதா அல்லாதவற்றையும் பண மசோதா என்று வகைப்படுத்தி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெறாமலேயே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களும் அவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன.
இந்நிலையில் மக்களவையைப் போலவே மாநிலங்களவைக்கும் நாம் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலங்களின் அளவைக் கருத்தில் கொள்ளாமல் அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் அளிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை நாம் வலியுறுத்த வேண்டும். அரசியல் நிர்ணய சபையில் லோக்நாத் மிஸ்ரா என்ற உறுப்பினர் இது தொடர்பான திருத்தத்தை முன்மொழிந்து விவாதித்திருக்கிறார். அன்றிருந்த சூழலில் அவரது திருத்தம் ஏற்கப்படவில்லை. ஆனால் இன்றைய சூழலில் அது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
நிதி ஆணையம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கு கடைபிடிக்கும் அம்சங்கள் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளன. 16ஆவது நிதி ஆணையம் வரி வருவாய் பகிர்வின் அளவை 41% இலிருந்து 40% ஆகக் குறைப்பதற்குத் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, மாநிலங்களுக்குப் பகிர தேவையில்லை என்ற வகையினத்தின் கீழ்வரும் செஸ், சர்சார்ஜ் முதலான கூடுதல் வரிகளின் அளவை இப்போதுள்ள ஒன்றிய அரசு உயர்த்திக் கொண்டே போகிறது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய வரி வருவாய்ப் பகிர்வைக் குறைப்பதற்கு ஒன்றிய அரசு கையாளும் தந்திரமாக இது உள்ளது. இந்த சூழ்ச்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது.
தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிப்பதற்கு இப்போது கூட்டப்பட்டுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் போலவே மாநிலங்களவை பிரதிநிதித்துவம் மற்றும் 16 ஆவது நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு சதவீதம் ஆகிய சிக்கல்கள் குறித்தும் விவாதிப்பதற்கு அடுத்து ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளாா்.
தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்