Homeசெய்திகள்அரசியல்ஆட்சியை கவிழ்க்க சதி..!! ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரருக்கு தொடர்பு??

ஆட்சியை கவிழ்க்க சதி..!! ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரருக்கு தொடர்பு??

-

- Advertisement -

செந்தில் பாலாஜி - அசோக்குமார்
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை வேறு கட்சிக்கு மாறக்கோரி பேரம் பேசியதாக திமுகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியைப் பெரும்பான்மை இழக்கச் செய்து கவிழ்ப்பதற்கான ரகசிய சதித் திட்டங்கள் நடந்து வருவதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) இளையராஜாவிடம், கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார், கோட்டை வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் IPDS திருநாவுக்கரசுவை திருவல்லிக்கேணி போலீஸார் இன்று கைது செய்தனர்.

we-r-hiring

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கரூரைச் சேர்ந்த 2 பேர் தான் தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசியதாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவலின் படி, கரூர் சென்ற போலீஸார் திமுக பிரமுகர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர். இதில் கார்த்தில் திமுக விளையாட்டு அணி துணை செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரது வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூ.35 கோடி பேரமா??

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா ஜூன் 29 அன்று சென்னை பெருநகர காவல் ஆணயரிடம் அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக்கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

தவெக எம்.எல்.ஏ இளையராஜா

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ. 35 கோடி வரை தருவதாக ஆசை வார்த்தை காட்டியதாகவும் இளையராஜா புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சு வார்த்தைக்கு உடன்படாததால் தானும் , தனது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் எம்.எல்.ஏ இளையராஜா தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு,அவருக்கு பின்னணியாக செயல்பட்ட திருச்சியை சேந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு தொடர்பு??

விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கைதான நரேஷை சென்னையில் சந்தித்து பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் ஆறிவுரையின் பேரிலேயே திருநாவுக்கரசு , சட்டமன்ற உறுப்பினர் இளையராஜவை தொடர்புகொண்டு பேசியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்சியைச் கவிழ்க்க சதியா?

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு மக்களிடையே கிடைத்து வரும் செல்வாக்கைச் சகித்துக்கொள்ள முடியாமல், ஆரம்பக்கட்டத்திலேயே ஆட்சியை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தவெக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக நால்வர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 3 எம்.எல்.ஏக்களை குறிவைத்து பேரம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சித் தலைமை அதிரடி:

தவெகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து, கட்சியை உடைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, தவெக தலைமை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசியதாகவும், எந்தவொரு வெளி அழுத்தங்களுக்கும், ஆசைகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்றும், கட்சியின் ஒற்றுமையே முக்கியம் என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

MUST READ