இளைஞர்களின் உணர்வுகளை வியாபாரமாக்கும் சீமான் – விக்னேஷின் தாய் சென்பகலெட்சுமி
இளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாபாரமாக பயன்படுத்துகிறார் என்றும் காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த தனது மகன் விக்னேஷின் பெயரை வைத்து, வெளிநாடுகளில் சீமான் பணம் வாங்கி உள்ளார் என்றும் விக்னேஷின் அம்மா சென்பகலெட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கடந்த 16.09.2016 தினத்தில் தீக்குளித்து இறந்த, விக்னேஷின் அம்மா செண்பகலெட்சுமி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காவிரி விவகாரத்தையொட்டி உயிரிழந்த விக்னேஷின் நினைவு நாளை, காவிரி எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அவர் கோரிக்கை வைத்தார்.
விக்னேஷின் உயிர் தியாகத்தை வைத்து பணம் சம்பாதிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது செண்பகலெட்சுமி குற்றம் சாட்டினார். விக்னேஷ்க்கு நினைவு மண்டபம் கட்ட, வெளி நாட்டில் பணம் வாங்கி செலவு செய்தவர் சீமான் என்றும் அதில் ஒரு ரூபாயை கூட தங்கள் குடும்பத்துக்கு தரவில்லை என்றும் புகார் கூறினார்.
தங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்தது போலவும் தனது கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தது போலவும் நாம் தமிழர் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதற்கு செண்பகலெட்சுமி கண்டனம் தெரிவித்தார்.
கண் அறுவை சிகிச்சைக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் என்னை எந்த மருத்துவமனைக்கும் அழைத்து செல்வில்லை என கூறிய அவர், தனது சித்திதான் கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதாக தெரிவித்தார்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/teaching-inscriptions-to-students/84734
நாம் தமிழர் கட்சியினர் எங்களுக்கு நகை கொடுத்தது போல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள் என்றும் அவர்களால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் செண்பகலெட்சுமி விளக்கினார். விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார் என அவர் குறை கூறினார்.
இளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் சீமான் வியாபாரமாக்கி வருவதாக விக்னேஷின் தாயார் செண்பகலெட்சுமி குறிப்பிட்டார்.