அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்றால் 6மாதக் காலம் பொறுமையாக இருங்கள்” என அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
”எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார்” என ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, ஓ.பி.எஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் 6 மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும். வழக்கு தொடர்வது போன்ற எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால் எடப்பாடி பழனிசாமியிடம் நாங்களே பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒற்றைத் தலைமையாய் இருந்து என்ன வெற்றி பெற்றீர்கள் என ஓ.பி.எஸ் கேட்கிறார். இரட்டைத்தலைமையாய் இருந்தபோது மட்டும் என்ன வெற்றி பெற்றோம்? அப்போதும் வெற்றி பெறவில்லை. அதில், கட்சிக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியதால் தான் ஒற்றை தலைமை உருவாக்கப்பட்டது. மிகச்சிறப்பான ஒற்றை தலைமையாக மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்திருக்கிறோம். 2026 எங்களுக்கு உச்சகட்டம். அமித்ஷா ஐயா இருக்கிறார்களே, அவர்களே சொல்வதாகக் கேள்விப்பட்டோம். இப்போதைக்கு ஜார்க்கண்டிலோ, மணிப்பூரிலோ ஆளுநர் பதவி கொடுக்கிறோம் என்று தான் சொல்லியிருப்பார்கள். நாங்கள் மறுக்கவில்லை. அதற்கான வாய்ப்பு ஓபிஎஸுக்கு இருக்கிறது. ஆனால் அதிமுக என்ற இயக்கம் வளர்வதற்கு சின்ன சின்ன இடையூறுகள் செய்யாதீர்கள்.
உண்மையிலேயே அதிமுக இணைய வேண்டும் என்று நினைத்தால் ரகசியமாக சொல்லிவிடலாம். இப்படி வெளிப்படையாக செய்தியாளரை கூப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஓபிஎஸ், மக்களிடமும், செய்தியாளர்களிடமும் ஏன் சொல்ல வேண்டும். அண்ணா திமுகவை காப்பாற்ற வேண்டும் என்கிறார். கடந்தமுறை இரு அணியாக பிரிந்து இருந்தபோது எத்தனை தடவை அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை கூப்பிட்டு விட்டு உங்களிடம் பேசி ஒன்றிணைந்தோம். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. துணை முதல்வர் பதவி கிடைத்தது. ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பெற்றீர்கள். சரி இப்போது, ”ஐயா, பொது வாழ்வில் எனக்கு கஷ்டமாக போய்விட்டது. மன்னித்து விடுங்கள். அதிமுக தொண்டர்களை நான் காப்பாற்ற வேண்டும்” என்று தனிப்பட்ட முறையில் சொல்லி அனுப்ப வேண்டியதுதானே.
அவர் உண்மையிலேயே அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று நினைத்தார் என்றால், அண்ணா திமுகவில் உண்மையிலேயே அவர் சேர வேண்டும் என்று நினைத்தால், அம்மாவுடைய அண்ணா திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால், எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுக் கொள்கிற வாய்ப்பை ரகசியமாக சொல்லிவிட வேண்டுமே தவிர தர்மம் வெல்லும், சூது வெல்லும் என்று செய்தியாளர்களிடம் பேசக்கூடாது.
ஓ.பி.எஸாக இருக்கட்டும். வேறு யாராக இருக்கட்டும். அண்ணா திமுக வளர வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் எல்லாம் நீதிமன்றத்திற்கு செல்லவே கூடாது. ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருங்கள். எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியாரிடம் போய் கேட்கிறோம். நல்லா இருக்கிறார்கள், சேர்த்துக் கொள்வோம் என சொல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.