தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை வருகிற 9ம் தேதி மாற்றி, அதற்கான அறிவிப்பை வெளியிட பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழக பாஜக தலைவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். பெரும்பாலும் 2 முறை ஒருவரை தலைவராக நியமிப்பது இல்லை. அந்த வழக்கப்படி அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதனால் அவரது பதவிக் காலத்தை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது புதிய தலைவரை நியமிக்கலாமா என்று டெல்லி மேலிடம் ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில்தான் அண்ணாமலையை மாற்றினால் கூட்டணிக்கு தயார் என்று எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அண்ணாமலையை மாற்ற அமித்ஷா முடிவு செய்தார். இதற்காக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். கடைசியாக நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நயினார் நாகேந்திரன் பற்றி பல தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் அண்ணாமலை பாஜக தலைமைக்கு ரிப்போர்ட்டாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் மட்டுமின்றி யார் யாரெல்லாம் தலைவர் பதவி லிஸ்டில் இருக்கிரார்களோ அவர்களை பற்றியெல்லாம் பாஜக தலைமையிடம் தனித்தனியாக அண்ணாமலை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநில தலைவரை டெல்லி மேலிடம் முடிவு செய்தாலும், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அந்த ஆலோசனையில் அவரை தலைவராக்கலாம், இவரை தலைவராக்கலாம் என்று பல்வேறு கருத்துகள் எழுந்தாலும், மேலிடம் யாரை தலைவராக்கலாம் என்று கருதுகிறதோ அவர்களைத்தான் அறிவிப்பார்கள். அதன்படி, பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகிறார். இதனால் மோடி வரும் நேரத்தில் மாநில தலைவரை மாற்றினால் நன்றாக இருக்காது என்று அமித்ஷா கருதினார். இதனால் அமித்ஷா உத்தரவுப்படி வருகிற 7, 8ம் தேதிகளில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்துகொள்கிறார். கூட்டத்திற்கு பிறகு தனது அறிக்கையை டெல்லியிடம் 9ம் தேதி வழங்குகிறார். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி 9ம் தேதி புதிய மாநில தலைவர் அறிவிப்பு வெளியாகும் என்று பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக மாநில தலைவர் அறிவிப்போடு சேர்த்து, மேலும் 13 மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.