கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து, மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கருர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய 10 பேர் மருத்துவமனை வரும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் கவலைக்கிடமான நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கருர் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கருர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் ஆகியோர் கரூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். இதேபோல் திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் கரூருக்கு செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.