“சாதாரண ரக நெல்லுக்கு வெறும் ரூ.28 உயர்வு ஏமாற்றமளிக்கிறது; பெருமிதம் பேச மட்டுமே அரசுக்கு இந்த அறிவிப்பு உதவும்” என அறிக்கை.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு விவசாயிகளுக்கு எந்தவிதப் பலனும் அளிக்காது என்றும், இது வெறும் விளம்பரத்திற்கான அறிவிப்பு என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல் வகைகளில் 95 சதவீதத்திற்கும் மேல் சாதாரண ரக நெல்களே அடங்கும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பான்மையான விவசாயிகள் பயிரிடும் இந்தச் சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையைத் தான் அரசு கணிசமாக உயர்த்தியிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். ஆனால், அனைவருக்கும் பயன் தரும் சாதாரண ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு வெறும் 28 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், இந்தச் சொற்ப உயர்வால் விவசாயிகளுக்கு எந்தவிதப் பொருளாதார நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் உண்மையான நிலையை உணராமல் ‘ஊக்கத்தொகையை உயர்த்திவிட்டோம்’ எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளவும், பெருமிதம் பேசவும் மட்டுமே இந்த அறிவிப்பு பயன்படும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். எனவே, விவசாயிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலையையும் ஊக்கத்தொகையையும் நியாயமான முறையில் உயர்த்தி வழங்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
