
12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, இந்த மசோதாவை நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து, மே தின விழா கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதாவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையின் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2023- ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் சட்ட முன்வடிவு) (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண் 8/2023) சட்டப்பேரவையில் ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர், இச்சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், இச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததை அடுத்து, அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப் பெறுகிறது”. இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.