இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 மீனவர்கள், இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். விமானநிலையத்தில் தமிழக அரசு சார்பில், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 24 பேர், கடந்த நவம்பர் 28 ஆம் தேதி 5 படகுகளில், தமிழக கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் இலங்கை கடற்படையினர் வந்து, தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, மீனவர்கள் 24 பேரையும் கைது செய்து, படகுகளையும், பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
அதன் பின்பு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி அவசர கடிதங்கள் எழுதினார்.
இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேசி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் இலங்கை நீதிமன்றம் இம்மாதம் 12-ம் தேதி தமிழக மீனவர்கள் 24 பேரையும் விடுவித்தது. அதோடு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை, அவர்கள் பொறுப்பில் இலங்கையில் தங்க வைத்து இருந்தனர். அதோடு மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. மேலும் மீனவர்கள் 24 பேருக்கும் இந்தியா வருவதற்கான, எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் போன்ற ஏற்பாடுகளையும் செய்தனர்.
இதை அடுத்து 24 மீனவர்களையும் இன்று அதிகாலை, இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை, தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில், மீனவர்களை அவர்களின் சொந்த ஊர்களான, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை சிறையில் இருந்த விடுதலையாகி சென்னை வந்த தமிழக மீனவர்களுக்கு, தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் சால்வைகள் அணிவிக்கப்பட்டன.
