விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர் தனது நண்பரும், அதே கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருபவருமான ஐயப்பன் என்பவருடன் புரட்டாசி சனிக்கிழமை அன்று திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் முடிந்து இருவரும் பேருந்து முலம் சனிக்கிழமை நள்ளிரவு கூட்டேரிப்பட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இருவரும் பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
மயிலம் அருகேயுள்ள விளங்கம்பாடியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் சென்றபோது பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே நடந்து சென்ற நபர் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், தடுப்புக்கட்டை மீது மோதி எதிர்புறம் சென்ற பூபாலன் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஐயப்பன், பூபாலன் உள்ளிட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் மயிலம் காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஒட்டுநரை தேடி வருகின்றனர்.