77 வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். ஆளுநர் கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருது, மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள்
வி. சங்கர், தீயணைப்பு ஓட்டுநர்
பி. சுரேஷ், தீயணைப்பு வீரர்
எஸ். ரமேஷ் குமார், தீயணைப்பு வீரர்
திருமதி ஜெஸ்ஸி, பீட்டர் ஜான்சன் (மறைவு)
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது
எம். கலிமுல்லா, திருப்பூர் மாவட்டம்
திரு. சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது
ஜி. வீரமணி, தஞ்சாவூர் மாவட்டம் காந்தியடிகள் காவலர் பதக்கம்
பி. நடராஜன், காவல் ஆய்வாளர், விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவு
சதியநந்தன், காவல் உதவி ஆய்வாளர், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல்நிலையம்
எஸ். மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையம்
கே. நடராஜன், காவல் உதவி ஆய்வாளர், கடலூர் மாவட்டம், புத்தூர் காவல் நிலையம்
வி.பி. கண்ணன், தலைமை காவலர், சேலம் மாவட்டம், மத்திய நுண்ணறிவு பிரிவு
சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள்
முதல் பரிசு – மதுரை மாநகரம், திரு. பி. பூமிநாதன், காவல் ஆய்வாளர்
இரண்டாம் பரிசு – திருப்பூர் நகரம், திருமதி கே. பிரேமா, காவல் ஆய்வாளர்
மூன்றாம் பரிசு – கோயம்புத்தூர் மாவட்டம், திரு. பி. சின்ன காமனன்,
காவல் ஆய்வாளர்
பின்னர், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு மாநில கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்ல பெரிய மேளம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அரசுத் துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 20 அணிவகுப்பு வாகனங்கள் வலம் வந்நன. பொதுமக்கள் குடியரசு தின நிகழ்வுகளை பெதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பெரிய எல்இடி திரைகளில் நேரலையாக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


