இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு, விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களைத் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது கைது
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி விசைப்படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகைத் தடுத்து நிறுத்தினர்.
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டிய இலங்கை கடற்படையினர், படகில் இருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய விசைப்படகு, மீன்பிடி வலைகள் மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
ஒரு மீனவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, விசைப்படகை ஓட்டிச் சென்ற மீனவர் ஏற்கெனவே ஒருமுறை இலங்கை கடற்படையினரால் பிடிபட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாகவும் கைது செய்யப்பட்டதால் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தண்டனைக் கைதியாக யாழ்ப்பாணம் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.
8 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்
மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீனவர்களை அங்குள்ள முகாமில் தங்க வைத்து, இந்தியா திரும்புவதற்கான பயண ஆவணங்களையும் ஏற்பாடு செய்தனர். அவசரகாலப் பயணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் மூலம் சென்னை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு
இதன்படி, நேற்று கொழும்பிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் 8 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று இரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களைத் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் 8 மீனவர்களும் அவர்களது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், படகை ஓட்டிச் சென்ற மற்றொரு மீனவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து இலங்கை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
