கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ) தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டில் 7,717 தனியார் பள்ளிகளில், 80 ஆயிரத்து 387 இடங்களுக்கு, 82 ஆயிரத்து 13 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2009 (RTE Act) சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் இருந்தது. அதனைத் தொடர்ந்த தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான நிதியை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது.
இதன் தொடர்ச்சியாக 2025–26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டார். இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG அல்லது I std) 25 சதவீதம் இடம் இதில் ஒதுக்கீடு செய்யப்படும். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் சேர்க்கைக்காக rteadmission@tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் எந்த வகுப்பில் சேர்ந்தார்களோ அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் சேர்க்கை ஒதுக்கீடு விதிமுறைகளின் படி முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். இலவச கட்டாய கல்விக்கு உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்ந்தால் வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இதில், 2025–26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு rteadmission@tnschools.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 6 ந் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7 தேதி, 30.9.2025 நிலவரப்படி நுழைவு வகுப்பில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை பள்ளிகள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் 7717 தனியார் பள்ளிகளில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 994மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதில் 25% ஆக, 80387 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இந்த இடங்களுக்கு 82 ஆயிரத்து 13 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
14 ந் தேதி தகுதி பெற்ற மாணவர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 15 ந் தேதி தகுதியுடைய மாணவர்களை EMIS Portal-இல் உள்ளீடு செய்யப்படும். விண்ணப்பங்கள் 25 சதவீதத்தை மீறினால், சிறப்பு முன்னுரிமைப் பிரிவுகளுக்குப் பின், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் அறிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை EMIS Portal-இல் அக்டோபர் 17ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.