குல்பி ஐஸ் சாப்பிட்ட 84 பேருக்கு பாதிப்பு
விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 84 பேர் நலமுடன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் பகுதியில் நேற்று இரவு தள்ளு வண்டியில் விற்ககப்பட்ட குல்பி ஐஸ் சாப்பிட்டுவிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு முட்டத்தூர் மற்றும் நேமூர் பகுதியைச் சேர்ந்த 52 குழந்தைகள் உட்பட 84 பேர் முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பழனி, தரமற்ற முறையில் குல்பி தயாரித்து விற்பனை செய்த ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள அந்த சிறு குல்பி ஐஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார் மேலும் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் இன்று மாலை போல் அனைவரும் வீடு திரும்புவார்கள் என தெரிவித்தார்.