
சிவாஜி கணேசனின் நடிப்பு மட்டுமின்றி, அவரது வசனம், நடனம் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பின்னாளில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த காலத்திலேயே மூன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து திரையுலகினரைத் தன் பக்கம் ஈர்த்தவர்.
அந்த வகையில், ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று வேடங்களிலும், ‘நவராத்திரி’ படத்தில் ஒன்பது கதா பாத்திரங்களிலும் சிவாஜி காட்டிய வேறுபாட்டை வேறு யாரிடமும் காண முடியாது. தாய் பாசம், வீரம், விரக்தி, உணர்ச்சி, கோபம் என பாவனைகளையும், நடிகர் சிவாஜியை போல் நயம்பட வெளிப்படுத்தியவர் வேறு யாரும் இல்லை.
நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழக அரசு கடந்த 1962- ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 1966- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும், 1984- ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் மத்திய அரசு சிவாஜி கணேசனுக்கு வழங்கிப் பாராட்டியது. அதைத் தொடர்ந்து, இந்திய திரைத்துறையில் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது, கடந்த 1996- ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
பின்னர், 1995- ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு நடிகர் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருது உலக அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.
ஒரு பக்கம் திரைத்துறையில் பயணித்தாலும், மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்த நடிகர் சிவாஜி கணேசன், பெரியாரின் திராவிடர் கழகத்தில் கடந்த 1944- ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக்கட்சியையும் தொடங்கியவர், கடைசியாக, வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்திலும் பயணித்தார். எனினும், திரைத்துறையில் சாதித்தது போல் நடிகர் சிவாஜி, அரசியலில் ஜொலிக்கவில்லை. அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது.
அரசியல் தலைவர்களுடனும், முன்னணி நடிகர்களுடன் நெருங்கி பழகிய நடிகர் சிவாஜி கணேசன், எளிமைக்கு உதாரணம். அவரது பணிவு, சுய ஒழுக்கம் ஆகியவை அவரது முன்னேற்றத்திற்கு முக்கியமானவை.