கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. நேற்று சட்டப்பேரவை கூடியதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். நேற்று பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதுமுகவினர் இன்று பங்கேற்றனர். இரண்டாவது நாளாக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு எந்த பிரச்சனையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம் என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனால் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். விஷச் சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கேள்வி நேரம் முடிந்து, நேரமில்லா நேரத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கிறேன் என சபாநாயகர் கூறியும் வெளிநடப்பு செய்தனர்.