ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று ஓய்வு பெறும் நிலையில் பணியிடை நீக்கம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1997 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த வெள்ளைதுரை சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவில்(2004) இடம்பெற்றவர்.
சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி அயோத்தி குப்பம் வீரமணியை(2003) என்கவுண்டர் செய்தது, கடந்த 2013 மருதுபாண்டியர் குருபூஜையின் போது உதவி ஆய்வாளர் ஆல்பின் சுதனை கொன்ற பிரபு ,பாரதி ஆகிய இருவரை என்கவுண்டர் செய்தது என பிரபல ரவுடிகளை என்கவுண்டர் செய்துள்ளார்.
கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு ராமு என்கிற கொக்கி குமார் என்பவர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வழக்கில் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரைக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
ஆவரங்காடு சுரேஷ் என்பவரிடம் ராமு என்கிற கொக்கிகுமார் 500 ரூபாய் கொள்ளை அடித்ததாக கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்து வைத்திருந்த நிலையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தார்.
அந்த வழக்கில் தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டு முதன்மை செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.