கரூர் மாநகரில் டிசம்பர் 29 ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்த திமுகவை கண்டித்து போராட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19.12.2022 அன்று நடைபெற இருந்த நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு கழக வேட்பாளர் வெற்றிபெறும் சூழ்நிலை இருந்ததால், கரூர் மாவட்டக் கழக அவைத் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு 9-வது வார்டு உறுப்பினருமான திரு. S. திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமானதிரு.M.R. விஜயபாஸ்கர் அவர்களின் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரிலிருந்து கடத்திச் சென்று, தேர்தல் முடிந்தவுடன் விடுவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 20.12.2022 அன்று மாலை, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் திரு. K.N.R. சிவராஜ் அவர்கள் கரூர்-ஈரோடு வேலுச்சாமிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திமுக-வைச் சேர்ந்த குண்டர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்து அவரை கடத்திச் சென்று, ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டு பின்னர் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். திரு. சிவராஜ் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கழக நிர்வாகிகள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்த திரு. சிவராஜ் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். திரு. சிவராஜ் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

திமுக-வினர் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்று இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். இந்த படுபாதக செயல்களை விடியா திமுக அரசின் முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருவதும், காவல் துறையினர் திமுக-வினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் முழு ஒத்துழைப்போடு, திமுக-வினர் இத்தகைய அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு, எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அராஜகத்திற்குப் பெயர்போன திமுக-வினரின் வன்முறை செயல்களைக் கண்டித்தும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணமான விடியா அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.12.2022 வியாழக் கிழமை மாலை, கரூர் மாவட்டம், கரூர் மாநகரில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
