Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சந்தையில் எஞ்சின் ஆயில் விற்க முயன்ற 3 பேர் கைது!

கள்ளச்சந்தையில் எஞ்சின் ஆயில் விற்க முயன்ற 3 பேர் கைது!

-

சென்னை அருகே அம்பத்தூரில் 51 லட்சம் மதிப்புடைய 13,400 லிட்டர் எஞ்சின் ஆயிலை கள்ளசந்தையில் விற்க முயன்ற 3 பேரை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அத்தியாவசிய இன்றியமையா பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்களை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் சென்னை வடக்கு அலகு காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அம்பத்தூர் மாதனங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாதனங்குப்பம் சர்வீஸ் ரோடு ஆண்டாள் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயில் டேங்கர் லாரியை சோதனையிட்டபோது அந்த டேங்கர் லாரியிலிருந்து 3 நபர்கள் ஆயிலை இறக்கிகொண்டிருந்தனர். அவர்கள் புத்தகரத்தை சேர்ந்த சிவக்குமார் (43), சதீஸ் (40) மற்றும் தண்டையார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் (32) என்பதும், அவர்கள் எந்தவித ஆவணமோ, உரிமமோ இல்லாமல் கள்ளதனமாக ஆயிலை எடுத்துகொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், டேங்கர் லாரியில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் இன்ஜின் ஆயில் மற்றும் பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 1400 லிட்டர் இன்ஜின் ஆயில் என மொத்தம் 51 இலட்சம் மதிப்புடைய 13,400 லிட்டர் இன்ஜின் ஆயிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

MUST READ