
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ரூ.50,000 கடனுக்காக பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(48). இவரது சொந்த அக்காள் மகளான மாலா(32)வை இரு வீட்டார் சம்பந்தத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கோவிந்தந் – மாலா தம்பதி அதே கிராமத்தைச் சேர்ந்த சத்யா மற்றும் கெங்கையம்மாள் ஆகியோரிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஐம்பதாயிரம் (50,000) ரூபாயை கடனாக பெற்றுள்ளனர். அதற்கு 10 பைசா வட்டி வீதம் மாதம் ரூ.5 ஆயிரம் வட்டி கட்டி வந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக தவறாமல் வட்டி செலுத்தி வந்த நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 4 மாதங்களாக வட்டி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் பணத்தை திருப்பி செலுத்துவதற்காக கோவிந்தன், பெங்களூருவுக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். 4 மாதமாக வட்டி பணம் வராததால் சத்யா , கெங்கையம்மாள் ஆகியோர் அடிக்கடி மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் மாலாவை திட்டி பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதனையறிந்து வேலை செய்யும்மிடத்தில் கோவிந்தன் 20,000 ரூபாயை முன்பணமாக பெற்று, தங்களால் வட்டி செலுத்த முடியவில்லை ஏற்கனவே 50 ஆயிரம் கடனுக்கு அதற்கு மேலாக 52,000 வட்டி செலுத்தி விட்டோம். இந்த 20,000 வைத்துக்கொண்டு இத்தோடு அனைத்தையும் முடித்துக் கொள்ளலாம் என அவர்களிடம் பேசியுள்ளார். அதற்கு ரூ. 50 ஆயிரம் அசல் மற்றும் ரூ. 35 ஆயிரம் வட்டி என மொத்தமாக ரூ. 85 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பைசல் செய்யப்படும் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருக்கு போன் செய்த மாலா, கடைசியாக உங்களிடம் பேசிக் கொள்கிறேன் என விரக்தியாக பேசிவிட்டு போனை துண்டித்துள்ளார். பின்னர் உடனடியாக கோவிந்தன், மீண்டும் பலமுறை மாலாவுக்கு தொலைபேசியில் அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த கோவிந்தன், ஊரில் உள்ள உறவினருக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது மாலா, உயிருக்கு ஆபத்தான நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாலா கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை மாலா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த கோவிந்தன், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ரூ.50,000 பணத்திற்கு 52 ரூபாய் வட்டி மட்டுமே செலுத்திவிட்டேன்; ஆனாலும் ஊரார் முன்னிலையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி கந்துவட்டி கொடுமை செய்ததே தன் மனைவி இறப்புக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் , தலைமறைவாக உள்ள சத்யா, கெங்கையம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.


