நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தென்மாநிலங்களுக்கு எதிராக மிக முக்கியமான மசோதாக்கள் தாக்கலாக உள்ளது. தமிழர்கள் வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒன்றிய அரசு, மக்களவை இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 3 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறது.
1. 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026 (The Constitution 131st Amendment Bill)

இந்த மசோதா தான் இக்கூட்டத்தொடரின் மிக முக்கியமானது. தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்த முன்மொழியப்பட உள்ளது. இதில் 28 மாநிலங்களிலிருந்து 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களிலிருந்து 35 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதற்கு முன்பு 2026-ம் ஆண்டிற்கு பிறகு அதாவது 2027 ஆண்டு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது அந்த விதியை நீக்கி, ஏற்கனவே “அறிவிக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பு” (2011 அல்லது அதற்குப் பிந்தைய தரவுகள்) அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
இதன் மூலம் 2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்காமல் உடனடியாக அமல்படுத்த முடியும். இந்த மசோதா, தொகுதிகளை மாற்றி அமைக்க ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை (Delimitation Commission) அமைக்க அதிகாரம் அளிக்கிறது.
இந்த ஆணையம் மாநிலங்களுக்கான இடங்களை ஒதுக்குதல், தொகுதி எல்லைகளை நிர்ணயித்தல் மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/ST) மற்றும் பெண்களுக்கான சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டை முடிவு செய்யும். இந்த ஆணையத்தின் முடிவுகள் சட்டப்பூர்வமானவை மற்றும் எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது.
- யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 (Union Territories Laws Amendment Bill)
யூனியன் பிரதேசங்களிலும் மக்களவை மற்றும் சட்டசபை இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும், அங்கு மகளிர் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
ஏப்ரல் 16 அன்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இந்த மசோதாக்கள் குறித்து உரையாற்றுகிறார். அன்று முழுவதும் உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும்.
ஏப்ரல் 17 அன்று விவாதங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிப்பார். அன்றைய தினமே மக்களவையில் இந்த மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம் என்பதால், இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், 2029 பொதுத்தேர்தலில் மக்களவை முற்றிலும் புதிய வடிவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்கள் எல்லாவிதமான அதிகாரங்களையும் இழந்த ஒரு அடிமை பிரதேசங்களாக மாற்றப்படும்.
