பள்ளி விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல்- 5 பேர் கைது
ஏற்காடு மான்போர்ட் தனியார் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பிரபல மான்போர்ட் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது . அதில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சக வகுப்பு தோழர்களை , அங்கு படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடம்பூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன், தனது அண்ணனிடம் தகவல் தெரிவித்துள்ளார். அண்ணன் மாணிக்கராஜா தனது நண்பர்கள் சிலருடன் ஏற்காட்டிற்கு வந்து, பள்ளிக்குள் நுழைந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை சரமாரியாக தாக்கியதோடு, வகுப்பறை டேபிள்களை உடைத்துள்ளனர்.
இதில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் பெங்களூர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடி , கடம்பூர் பகுதியைச் சேர்ந்த அமமுக பிரமுகரின் பேரனான மாணிக்கராஜா மற்றும் அவரது நண்பர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது, அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நேற்று முன்தினம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவணன் ஐயப்பன்(22) துரைராஜ்(23) ஆகிய இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த மேலும் மூன்று பேரை , காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.