ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பசுவபட்டி பகுதியை சேர்ந்தவர் அபிநயா. இவர் ஈரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் கிளர்க் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தனது வீட்டில் இருந்து காங்கேயத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்று விட்டு மீண்டும் பேருந்து மூலம் பசுவப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள வீட்டிற்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சென்னி மலையில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அபிநயா மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அபிநயாவுக்கு தலை தோள்பட்டை மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர பகுதியை சேர்ந்த நபர் காரை ஓட்டி வந்தபோது இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி குறுக்கே வந்ததால் காரை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.