9 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்!
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. சென்னை மழை தொடர்பாக 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நாவலூர், கேளம்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், முட்டுகாடு, கோவளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டதில் 2வது நாளாக கனமழை தொடர்கிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் அதிகளவு மழை பொழிவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 200 வருடங்களில் 1991,1996,2023 ஆகிய ஆண்டுகளின் ஜூன் மாதத்தில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழைநீடிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
